தமிழகத்தில் ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகளுக்கு செக்.. இன்று முதல் ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றி செல்ல முடியாது
சென்னை: கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த லாரி உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. எனவே'ஜி.பி.எஸ். பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் ஏற்றிச் செல்ல இன்று முதல் அனுமதி இல்லை' என்று தமிழ்நாடு அரசின் கனிம வளத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவிற்கு தமிழ்நாட்டின் கனிம வளங்கள் சட்டவிரோதாக கடத்தப்பட்டு வந்ததாக புகார்கள் அதிகரித்தது. பெயருக்கு அனுமதி பெற்றுக்கொணடு, கணக்கில்லாமல் லாரிகள் மூலம் கனிம வளங்கள் சுரண்டப்பட்டதாக புகார்கள் அதிகரித்தது.. இதனை தடுக்க தமிழக அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

அதன்படி, கனிம வளங்கள் ஏற்றி செல்லும லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.. அதற்கான அவகாசம் நேற்று வரை கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான லாரிகளில் இன்னும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படவில்லை. அதனால் அந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனிம வளத்துறை இணை-இயக்குனர் ஆறுமுக நயினார் கூறுகையில், கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த லாரி உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 30ம் தேதியுடன் அந்த கால அவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் கனிம வளம் ஏற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருக்கின்றன. ஆனால் இதுவரைக்கும் 24 ஆயிரம் லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள லாரிகளில் உடனடியாக பொருத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அதனுடைய அனுமதி சீட்டு (டிரிப் ஷீட்) கண்டிப்பாக ரத்து செய்யப்படும். அனுமதி இல்லாமல் இனிமேல் கனிம வளங்களை லாரியில் எடுத்துச் செல்ல முடியாது. ஜி.பி.எஸ். கருவிப் பொருத்திய லாரிகளில் மட்டுமே கனிம வளங்கள் இனி ஏற்றி செல்ல முடியும். மற்ற எந்த லாரிகளிலும் கருங்கற்களோ, எம்-சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது. அதையும் மீறி கனிம வளங்கள் கடத்துவது பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழ்நாடு மணல் லாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறும்போது, 'கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதை தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினார் ஜி.பி.எஸ். பொருத்தாத லாரிகளிலும் பொருத்த அறிவுரை கூறப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று குவாரிகளிலும் கேமராக்கள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
