Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலா..நிலா ஓடிவா.. பெருந்தலைவர் கவிஞர் எம்.சி. ராஜா - மறக்கப்பட்ட தலைவரின் பிறந்தநாள் இன்று

மழலைப் பாடல்களை இயற்றி வெளியிட்ட பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய தமிழக ஆளுமை எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

எம்.சி.ராஜா பிறந்தநாளை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

Perunthalaivar writer M. C. Rajah birthday Story

'கை வீசம்மா கைவீசு',
'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு',
'அகத்திக்கீரைப் புண்ணாக்கு',
'நிலா நிலா ஓடிவா,
'காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா!.' போன்ற பல மழலைப் பாடல்களை இயற்றி வெளியிட்ட பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று! பதிவிட்டுள்ளனர்.

வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய தமிழக ஆளுமை.

தலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன், தென்னாப்பிரிக்கா வில் நிலைகொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் தொடக்க நிலையில் இருந்த காலகட்டத்தில், தலித் அரசியலை, நாடு தழுவிய அளவில் முன்னெடுத்தவர்களில் ஒருவர் எம்.சி. ராஜா.

எம்.சி.ராஜா ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்ப கால நிர்வாகிகளுள் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாவார். சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் பிறந்தார். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளியிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த எம்.சி.ராஜா, பின் அதே இடங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி.ராஜா எழுதிய அளவை (Logic Text book) நூல், கற்பிக்கும் முறை தொடர்பாகத் தமிழில் வெளியான முன்னோடி நூல் எனக் கருதப்படுகிறது. மாணவர்களுக்காகச் சிறு சிறு இலக்கண நூல்களையும், நீதி நூல்களையும் எழுதியுள்ளார். ஆர்.ரங்கநாயகி அம்மாளுடன் இணைந்து. மழலையர் பாடல் நூலை, 'கிண்டர்கார்டன் ரூம்' என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தலித் விடுதலைக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் இரவுப் பள்ளிகளையும், விடுதிகளையும் தொடங்கினார். 'கல்வியின் மூலமாக தலித்துகள் வாழ்வில் வளர்ச்சியைக் காண முடியும்; அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும். எனவே, எம் மக்களுக்கு இலவசக் கல்வி கற்க அனுமதி தாருங்கள்' என ஆட்சி யாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். 1917-ல் தொடக்கக் கல்விக் குழு, 1919-ல் தொடக்கக் கல்வி மசோதாவுக்கான சட்டவரைவுக் குழு, உயர் கல்வி மறுசீரமைப்புக் குழு, சென்னைப் பல்கலைக்கழக செனட் எனப் பல குழுக்களில் பங்கேற்று கல்வி உரிமைக்காகப் போராடினார்.

1910ஆம் ஆண்டில் அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய எம்.சி.ராஜா, அயோத்திதாசரின் ஆதிதிராவிட மகாஜன சபைக்குப் புத்துயிரூட்டினார். 1916-ல் அதன் செயலாளராகப் பொறுப்பேற்று தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் இலங்கையிலும் பரவிய கிளைகளின் செயல் திட்டத்தை வகுத்தளித்தார். 1917-ல் மாண்டேகுவையும், 1919-ல் செம்ஸ்போர்டையும் சந்தித்து, ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமையைக் கோரி மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை மாகாண சட்ட மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம், ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள், தாய்மொழிக் கல்வி உரிமை, கல்விக் கொள்கையில் சமூக நீதி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நிலமும் வேலையும், சிறுபான்மையோர் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம் என சட்ட மன்றத்தில் பல்வேறு விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்தார். 1922-ல் ஆதிக் குடிகளான பறையர், பஞ்சமரை அதிகாரபூர்வமாக, 'ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர்' எனக் குறிப்பிட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தார். எம்.சி.ராஜா தந்த அடையாளத் தாலேயே இன்றும் பட்டியல் வகுப்பினர் குறிப்பிடப் படுகின்றனர்.

1923ஆம் ஆண்டில் சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப் பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கோரினார். இதற்காக சென்னை மாகாணம் மட்டும் அல்லாமல், டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும், 100-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார்.

ஒடுக்கப்பட்டோருக்கான சமூக உரிமை, வாக்குரிமை, அரசியல் அதிகாரம் கோரிய எம்.சி.ராஜா 'தி அப்ரெஸ்டு ஹிந்துஸ்' (ஒடுக்கப்பட்ட இந்துக்கள்') என்ற நூலை வெளியிட்டார். வரலாற்றிலும் இலக்கியத்திலும் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும், கள அனுபவத்தையும் வெளிக்கொணர்ந்த நூல் இது. இந்திய சாதி சமூகத்தின் உண்மையான முகத்தை ஆட்சியாளருக்குக் காட்டியது. 1928-ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் அமைப்பினை ஏற்படுத்திய எம்.சி.ராஜா லண்டனுக்குப் போய், "இந்தியாவில் 130 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பின்னரும்கூட, தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் அதே நிலையில் இன்னமும் இருக்கிறோம் என்ற உண்மை துரதிர்ஷ்டவசமானது" என வாதிட்டார்.

அம்பேத்கருடன் தொடக்கத்தில் கடுமையாக முரண்பட்டர் எம்.சி.ராஜா. அம்பேத்கர் என்ற மாபெரும் ஆளுமையின் வருகை தலித் தரப்பில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 1930-ல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு நழுவியதால், அம்பேத்கரிடம் முரண்பட்டார்.
அம்பேத்கரின் நியாயமான போராட்டத்தை விரைவாகவே உணர்ந்த எம்.சி.ராஜா, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ''புனே ஒப்பந்த விவகாரத்தில் நானே என்னை மன்னிக்க முடியாத அளவுக்குத் தவறு செய்துவிட்டேன்'' என வருந்திய எம்.சி.ராஜா, ''அம்பேத்கரே எங்கள் பிரதிநிதி'' என முழங்கினார்.

தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலும் தடம்பதித்த எம்.சி.ராஜாவைப் பற்றி இங்கு, இன்னும் முழுமையான வரலாற்று நூல்கள் எழுதப்படவில்லை. அவரது சட்ட மன்ற உரைகள், நாடாளுமன்ற உரைகள், மாநாட்டுத் தீர்மானங்கள், அறிக்கைகள், பங்களிப்புகள் என முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. இந்த அவல நிலையில் தலித் ஆய்வாளர் வே.அலெக்ஸ் கொணர்ந்த 'பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-1' என்ற நூல் மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. மறக்கப்பட்ட அந்த தலைவரை நினைவுகூற வேண்டும் என்று தலித் இயக்கத்தலைவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+