லாக்டவுனிலும் தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை - இன்று எவ்வளவு தெரியுமா
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 20 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 24 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல்,டீசல் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு விட்டர் பெட்ரோல் 20 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 06 காசுகள் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 24 பைசா அதிகரித்து 89 ரூபாய் 11 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.
நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100
பீகார் தேர்தலை முன்னிட்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலை உயர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் பீகார் தேர்தல் முடிந்த உடன் நவம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயரத்தொடங்கியது. தினசரி விலை உயர்வினால் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

மே 2 முதல் விலை உயர்வு
இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. சில நாட்கள் விலைகள் குறைக்கப்பட்டன. இந்த நிலையில் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.

திங்கட்கிழமை மாற்றமில்லை
ஞாயிறன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை 29 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் 12வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.86ஆகவும், டீசல் விலை ரூ.88.87ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமையன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இன்று விலை அதிகரிப்பு
இந்த நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 24 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய விலை
இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் பெட்ரோல் 95 ரூபாய் 06 பைசாவாகவும் டீசல் ஒரு லிட்டர் 89 ரூபாய் 11 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் 13வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications