அக்கவுண்டை செக் பண்ணுங்க.. ரூ.2000 வந்துருக்குமே! விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. மோடி அரசின் கிஃப்ட்
சென்னை: நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான தருணம் இன்று நடந்துள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் 23-வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார். இதன் மூலம் நாடு முழுவதும் 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.2,000 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று இந்த நிதியை வெளியிடுகிறார். மத்திய அரசின் நேரடி பயன் பரிமாற்ற (டிபிடி) முறையின் மூலம், மொத்தம் ரூ.18,880 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த நிதி உதவியின் மூலம் 9.44 கோடி விவசாயிகள் பயனடைய உள்ளனர். இவர்களில் 2.18 கோடிக்கும் மேற்பட்டோர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிராமப்புற பொருளாதாரத்திலும், விவசாயத் துறையிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம் கிசான்
கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை ஒரே முறையாக வழங்கப்படாமல், ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட விவசாய செலவுகளை சமாளிக்க இந்த நிதி உதவி பெரும் துணையாக இருந்து வருகிறது.
ரூ 2000, விவசாயிகள்
23-வது தவணை தொகை வழங்கப்பட்ட பிறகு, திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ரூ.4.46 லட்சம் கோடியை தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23-வது தவணை நிதி வெளியீட்டை முன்னிட்டு, நாடு முழுவதும் வேளாண் அறிவியல் மையங்கள், கிராம ஊராட்சிகள், வேளாண் சந்தைகள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகள் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பிரதமர் மோடி
இந்த நாளை மத்திய அரசு "பிஎம் கிசான் கொண்டாட்ட நாள்" எனவும் கடைப்பிடிக்க உள்ளது. விவசாயிகளுக்கான மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிஎம் கிசான் நிதி வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைந்து, விவசாயிகளுக்கான பல்வேறு புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அக்ரிஸ்டாக்
இயற்கை பேரிடர்கள், கனமழை, வறட்சி, பூச்சி தாக்குதல் மற்றும் நோய் பாதிப்புகளால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் ஒரு பகுதியாக, "அக்ரிஸ்டாக்" என்ற புதிய டிஜிட்டல் தளத்தையும் பிரதமர் அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலம் உர விநியோகம், கிசான் கிரெடிட் கார்டு சேவைகள், நேரடி நிதி பரிமாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விவசாயிகள் எளிதாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம்
ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் "இயற்கை விவசாயத்திற்கான தேசிய இயக்கம்" திட்டமும் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாய முறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விவசாய செலவுகளை குறைத்து, மண் வளத்தை பாதுகாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
குறுவை சாகுபடி
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கு, ஆதார் இணைப்பு மற்றும் மின்னணு கேஒய்சி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தகுதியான பயனாளிகளின் கணக்குகளில் இன்று ரூ.2,000 வரவு வைக்கப்பட உள்ளது. இதனால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இன்று உண்மையிலேயே "ஹேப்பி நியூஸ்" நாளாக அமைந்துள்ளது. குறிப்பாக குறுவை சாகுபடி மற்றும் அடுத்த கட்ட விவசாயப் பணிகளுக்கான செலவுகளை சமாளிக்க இந்த நிதி உதவி ஆதரவாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications