தமிழகத்தில் சூறாவளி பயணம்: ரூ.17,300 கோடி 'சூப்பர்’ திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
சென்னை: தமிழ்நாட்டில் ரூ17,300 கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10.45 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குப் பிரதமர் செல்கிறார். மாலை 5.15 மணியளவில் மதுரையில் நடைபெறும் 'எதிர்காலத்தை உருவாக்குதல் - வாகன உற்பத்தி துறையில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான டிஜிட்டல் இயக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். நாளை காலை 9:45 மணியளவில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் மோடி: கேரளா மாநில திருவனந்தபுரம் நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு தமிழ்நாட்டின் மதுரைக்கு இன்று மாலை வருகை தருகிறார் பிரதமர் மோடி. மதுரையில், 'வாகன உற்பத்தி துறையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு எதிர்காலத்தை உருவாக்குதல் - டிஜிட்டல் இயக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, வாகன உற்பத்தித்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரிடையே உரையாற்றுவார். இந்திய வாகனத் தொழிலில் சிறு,குறு,நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரித்து மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு முக்கிய முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார். டிவிஎஸ் ஓபன் இயக்கத் தளம் மற்றும் டிவிஎஸ் இயக்கம் - திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும். நாட்டில் உள்ள சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது, செயல்பாடுகளை முறைப்படுத்துவது, தன்னம்பிக்கை பெறவும் உதவுவது ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முன்முயற்சிகள் இருக்கும்.
தூத்துக்குடி துறைமுகத்தில்..: தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த சரக்குப் பெட்டக முனையம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை கிழக்கு கடற்கரைக்கான கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவின் நீண்ட கடற்கரை, சாதகமான புவியியல் அமைவிடத்தை மேம்படுத்துவதும், உலக வர்த்தக அரங்கில் இந்தியாவின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், இப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
முதல் பசுமை ஹைட்ரஜன் துறைமுகம்: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார். கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பதுங்கு குழி வசதி போன்றவை இந்தத் திட்டங்களில் அடங்கும். பசுமை கப்பல் முன்முயற்சியின் கீழ், இந்தியாவின் முதலாவது உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் உள்நாட்டு நீர்வழி கப்பலையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்படுகிறது. தூய்மையான எரிசக்தி தீர்வுகளைத் தழுவுவதற்கும் நாட்டின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு வெளியீட்டை அடைவதற்கும் ஒரு முன்னோடி நடவடிக்கையாக இது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார்.
ரயில் பாதைகள் தொடக்கம்: இந்த நிகழ்ச்சியின் போது, வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம் - ஆரல்வாய்மொழி பிரிவு உட்பட இரட்டை ரயில்பாதை திட்டங்களைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இரட்டைப் பாதைத் திட்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்களின் பயண நேரத்தை குறைக்க உதவும்.
4 சாலை திட்டங்கள்: சுமார் ரூ.4,586 கோடி செலவில் தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தர்மபுரி பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் இருவழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல், தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் பிரிவை இருவழிப்பாதையாக மாற்றுதல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்தத் திட்டங்கள் போக்குவரத்தை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சமூகப்-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications