பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்.. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு
சென்னை: பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு இதுகுறித்த முக்கிய தகவலையும் வெளியிட்டிருக்கிறது.
சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு நேரடியாக களம் இறங்கியிருக்கிறது.. இதையடுத்து, வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் "பிரதமரின் சூரிய வீடு" என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரம்: இந்த திட்டத்தின்படி, வீடுகளில் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக்கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.. வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசும் மானியம் வழங்கி வருகிறது.
அதன்படி, மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.. இதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது.
மானியம்: இந்த மானியம் வழங்குவதையடுத்து, பல்வேறு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.. தமிழகத்திலும், வீடு, நிறுவனங்கள் போன்றவற்றில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனாலும், பலருக்கு எந்த நிறுவனம் மூலமாக, சூரியசக்தி கூரைகள் அமைப்பது என்பது தெரியவில்லை. அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் கிடைப்பதுமில்லை.. இந்த சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி உற்பத்திக்கான கூரைகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது. மின்வாரியத்தின் இணையதளத்தில் அந்த நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
நம்பிக்கை : இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலமாக, வீடுகளில் சூரியசக்தி உற்பத்திக்கான மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் எளிதாக கிடைக்கும்" என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications