இது ஒரு கணக்கு.. பாஜக - பாமக கூட்டணியால் அதிமுகவுக்கு லாபம்; பாஜகவுக்கு நஷ்டம்! எப்படி தெரியுமா?
சென்னை: பாஜகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமக மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நேற்றுவரை அதிமுக அணியில் பாமக இடம்பெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக பாஜகவுடன் இன்று காலை 7 மணிக்குக் கூட்டணியை உறுதி செய்துள்ளது பாமக. ஒரே இரவில் ஒட்டுமொத்த அரசியல் களமும் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

இந்தக் கூட்டணி ஒன்று புதிய கூட்டணி அல்ல. கடந்த 2014 முதல் உள்ள ஒரு பழைய கூட்டணிதான். அதிமுக பக்கம் பாமக சாய்ந்திருந்தால்தான் அது பாஜக இல்லாத அதிமுக தலைமையிலான புதிய கூட்டணியில் பாமக இடம்பெற்று விட்டது என்று சொல்லிக் கொள்ள முடியும்.
அந்த வாய்ப்பை பாமக தலைவர்களான டாக்டர் ராமதாசும் அன்புமணியும் அளிக்கவில்லை. பாஜகவுடனான பழைய கூட்டணியை உறுதி செய்வதற்கே இத்தனை தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தமிழ்நாட்டில் ஒரு தேவையற்ற விவாதத்திற்கு பாமக இடமளித்து வந்துள்ளது.
பாஜகவுடனான கூட்டணி உறுதியான பிறகு பேசிய அன்புமணி ராமதாஸ், 'கடந்த பத்து ஆண்டு காலமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக அங்கம் வகித்து வருகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட பாமக முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி, மோடியின் நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாமக இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவுக்கு 60 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உருவாகி உள்ளது. மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்' என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை, "தமிழகத்தில் பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மிக முக்கியமான ஒரு கட்சி. அந்தக் கட்சி முக்கியமான ஒரு முடிவை எடுத்து பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி உள்ளது. மூன்றாவது முறையாக 400 எம்பிக்களை தாண்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஒரு வேள்வியோடு களமிறங்கி உள்ளது.

தமிழகத்தில் தனிப்பெரும் தலைவராக டாக்டர் ராமதாசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாஜகவின் மூத்த தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாயின் அன்பைப் பெற்றவர் டாக்டர் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவில் துடித்துக் கொண்டிருக்கும் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே சம்பாதித்திருக்கக் கூடிய கட்சிகளுக்கு மாற்றாக வலிமையான கூட்டணியை 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமைத்துள்ளது. இதற்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்ற முழுமையான ஆதரவு எங்களுக்கு உள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் முடிவாகி உள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை விரைவில் அறிவிப்போம்" என்று கூறியுள்ளார்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அரசியல் கணக்குகளைப் போட்டு அலசி சில முடிவுகளைச் சொல்லி இருக்கிறார். அவரது கருத்துப் படி பாஜக- பாமக கூட்டணியால் யாருக்கு இலாபம்?அவரே சொல்கிறார்.

"பாமக எந்தத் தொகுதிகளில் எல்லாம் பலமாக உள்ளதோ அங்கு எல்லாம் பாஜக வலிமையாக இல்லை. பாஜக வலிமையாக உள்ள ஒரு சில தொகுதிகளில் பாமகவுக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆகவே, இந்தக் கூட்டணியால் யாருக்கு இலாபம் என்பது புரியாத புதிராக உள்ளது.
பாமகவுக்கு தங்களின் சின்னத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது. 10 தொகுதிகளில் போட்டியிடும்போது குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைக்கும். அதைக் கொண்டு சின்னத்தை அந்தக் கட்சியால் தேர்தல் ஆணையத்தில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான விசயம்.
பாஜகவுடன் பாமக இணைவதால் பாஜக கூட்டணிக்கு ஒரு வாக்கு சதவீதம் கிடைக்கும். அதை வைத்து அவர்கள் வளர்ந்துள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவார்கள். அதற்கு இது உதவியாக இருக்கும்.
பாமகவுக்கு 10 தொகுதிகளைக் கொடுத்துவிட்டது பாஜக. இதற்கு முன்பாக 3 தொகுதிகளை தமாகா கேட்டு வருகிறது. இந்த இரண்டையும் கூட்டினால் 13 தொகுதிகள். தனித்தனியாக சில கட்சிகளுக்கு 5 தொகுதிகளை பாஜக ஒதுக்க வேண்டி உள்ளது. ஆக, மொத்தம் 18 தொகுதிகள்.

இவை போக ஒபிஎஸ் அணிக்கும் டிடிவி தினகரன் அணிக்கும் சில தொகுதிகளை பாஜக ஒதுக்க வேண்டும். இத்தனையும் தாண்டி பாஜக 15 தொகுதிகள் வரை போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதுவே கிடைக்குமா என்பது ஆச்சரியம்தான்.
இதனால் பாஜக தனிப்பட்ட முறையில் வாங்கப் போகும் வாக்கு வங்கி குறையக் கூடிய அபாயமும் இதில் உள்ளது. அவர்கள் 2வது இடத்தில் பாஜக உள்ளதாகச் சொல்கிறார்கள்.
அப்படி என்றால், அதிமுக அணியில் தேமுதிகவும் இடம்பெறாத பட்சத்தில் அந்தக் கட்சி 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிலை வரும். தனித்துப் போட்டியிடுவதால் அதிமுக தொண்டர்கள் அதிக உற்சாகம் பெறுவார்கள். மொத்தமாக 4.5 கோடிக்கு மேல் வாக்குகள் பதிவானால் அதில், 1 கோடிக்கு அதிமகான வாக்குகளை அதிமுக பெறும்.

திமுக 21 தொகுதிகளிலும் நிற்கிறது. அதிமுக 40 தொகுதிகளில் போட்டியிடும் போது திமுகவைவிட அதிமுக வாக்கு சதவீதம் அதிகம் கிடைக்கும். பாஜக 15 தொகுதிகளில் போட்டியிடும் போது அதிமுகவைவிடக் குறைச்சலான வாக்குகளைத்தான் பெற முடியும். இது பாஜகவுக்கு ஒரு பின்னடைவு.
அப்படிப் பார்த்தால் அதிமுகதான் தமிழ்நாட்டில் 2வது பெரிய கட்சி என்பது மீண்டும் நிரூபணமாகும். இதனால் பாஜகவின் கருத்து அடிப்பட்டுப் போய்விடும். பாமகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதால் வாக்குகளைப் பிரித்து பாஜக காட்டச் சௌகரியமாக இருக்கும். ஆனால் ஒரு இடத்தில்கூட இந்தக் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே நான் நம்புகிறேன்" என்கிறார்












Click it and Unblock the Notifications