வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.. அன்புமணி மீது புகார்களை அடுக்கிய ராமதாஸ்! அவசரமாக எடுக்கும் முடிவு?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் தீவிரம் அடைந்து இருக்கிறது. பாஜக கூட்டணி தொடர்பான விவகாரத்தால் தான் இருவருக்குள்ளும் பிரச்சனை முதன் முதலில் ஏற்பட்டதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இதற்கு இடையே தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என ராமதாஸ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண பலம், சினிமா செல்வாக்கு என எந்தவித செல்வாக்கும் இல்லாமல் ஒரு கட்சியை உருவாக்கி இன்று வரை அதனை பெரும் கட்சியாக வைத்திருப்பவர் டாக்டர்.ராமதாஸ். வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றிய ராமதாஸ், தொடர்ந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றார்.
ஆனால் இதுவரை அவர் தேர்தலில் போட்டியிட்டதும் கிடையாது எந்த பதவியை அனுபவித்ததும் கிடையாது. அதே நேரத்தில் ஏகே மூர்த்தி, ஏழுமலை உள்ளிட்ட பலரை மத்திய அமைச்சர்களாக மாற்றி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதற்குப் பிறகு முழுக்க முழுக்க தீவிர அரசியலுக்கு திரும்பிய அன்புமணி தற்போது தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலை மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு அவர் எதிர்கொண்டார். தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் அதற்கு அடுத்த தேர்தல்களில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் பாமக உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டின.
2021ல் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தாலும் பாமகவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு எம்எல்ஏக்கள் கிடைத்தனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் தோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் ஐந்துக்கும் மேற்பட்ட 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தந்தை மகன் இடையே மோதல் வலுத்து வருகிறது. வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாகவும், மாநாட்டின் போதும், மாநாட்டுக்கு பின்னரும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸை விமர்சித்து பேசி வருகிறார். ஆனால் ராமதாஸ் சொல்வதைக் கேட்டு தான் நடப்பேன் என அறிக்கை வாயிலாகவும் நேரடியாகவும் அன்புமணி கூறினார். கடைசியாக நடந்த தர்மபுரி நிகழ்ச்சியில் நான் என்ன தவறு செய்தேன், தலைவர் பதவியில் இருந்து நீக்க என வேதனையோடு பேசினார் அன்புமணி. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தனது தாய் மீது தாக்குதல் நடத்த முயன்றார், தலைமை பண்பு இல்லை என மகன் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸின் பேச்சிலிருந்து பாஜக கூட்டணி காரணமாகவே இருவர் இடையே மோதல் வெடித்திருப்பது வெளிவந்திருக்கிறது. தனக்குத் தெரியாமலேயே அண்ணாமலையை தைலாபுரத்துக்கு வரவழைத்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் அப்படி அமைத்திருந்தால் ஐந்து, ஆறு எம்பி சீட்டுகள் கிடைத்திருக்கும் என கூறிய ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக கூறி அதிர வைத்திருக்கிறார்.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது என கூறிய ராமதாஸ், அன்புமணி மைக்கை டேபிள் வீசியது எனது தலையில் வீசியது போல் இருந்தது எனவும் கூறி இருக்கிறார். இறுதியாக தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என கூறியிருப்பது பாமகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு பொதுக்குழுவும் செயற்குழுவும் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் மீண்டும் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் பாமக விதிகள் படி கட்சி தலைவர் தான் பொது குழுவை கூட்ட முடியும். அதாவது கடந்த முறை பொதுக்குழு நடந்த போது ஜிகே மணி தான் பொது குழுவை கூட்டினார். அதில் தான் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தற்போதைய சூழலில் ராமதாஸ் இவ்வாறு அறிவித்திருப்பது பாமகவினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பிற கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் பாரம்பரியமிக்க கட்சி அப்பா மகன் சண்டையால் பரிதவிப்பில் இருப்பதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications