திமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் புளுகுமூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து விக்ரவாண்டியில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், கலைஞர் என்றால் ''கலைப்பவர்'' என்றும் விமர்சித்தார். மறைந்த தலைவரை பற்றி விமர்சிப்பது நாகரீகமற்றது என்பது தெரிந்தும் அதனை அவர் ஏனோ தவிர்க்கவில்லை. 1995-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருணாநிதிக்கு தாம் தான் முதன்முதலில் மஞ்சள் துண்டை அணிவித்ததாகவும், ஆனால் அவர் பாமகவை கழற்றிவிட்டு த.மா.கா.வுடன் கூட்டணி வைத்ததாக பேசினார்.

பொய் பேசுவது திமுகவினருக்கு கை வந்த கலை என்று விமர்சித்த ராமதாஸ், மு.க.ஸ்டாலின் வண்டி வண்டியாக அள்ளிவிடும் பொய்கள் விக்ரவாண்டி தொகுதியில் எடுபடாது எனக் கூறினார். மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்ததற்கு திமுக தான் காரணம் எனத் தெரிவித்தார். சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி 6 மாதத்திற்கு முன்பே கருணாநிதிக்கு தாம் கடிதம் எழுதியும், முப்பெரும் விழாவை தள்ளிவைக்காமல் சென்னைக்கு திமுகவினரை வரவழைத்தார் எனக் கூறினார்.
108 ஆம்புலன்ஸ் திட்டம் என்பது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்தது என்றும், ஆனால் அதற்கு திமுக வெற்று தம்பட்டம் அடித்து தாங்கள் தான் கொண்டுவந்தாக சொல்லித்திரிகிறது என கடுகடுத்தார். 18 வாரத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியவர் அன்புமணி என அவரது தந்தை ராமதாஸ் புகழாரம் சூடினார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அள்ளிவிடும் கட்டுக்கதைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என பேசினார்.இதனிடையே கூட்டத்தில் ராமதாசுடன் அமர்ந்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முகத்தில் சோகம் தெரிந்தது. அவர் தனது தங்கை மகன் உயிரிழந்த துக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவரவில்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications