ராமதாஸ் அத்தியாயம் ஓவர்.. ஒட்டுமொத்தமாய் அன்புமணி கையில் பாமக! ’அய்யா’ போனைப் போட்டும் எடுக்கலையாமே!
சென்னை: பாமகவில் நடக்கும் மோதல் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. அதே நேரத்தில் அன்புமணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ராமதாசை புறக்கணிக்கும் மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கூட மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக வட மாவட்டங்களில் மிக வலுவாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சியை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என திமுகவும் அதிமுகவும் விரும்புவது வழக்கம் தான்.
அந்த அளவுக்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வைத்திருப்பவர் ராமதாஸ். வன்னியர் சங்கத்தை கட்சியாக மாற்றி பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கியவர். தொடர்ந்து தனது மகனையும் அரசியலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அன்புமணி ராமதாஸ் முதல் முறை எம்பி ஆன போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.

தொடர்ந்து 2016 தேர்தலை அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக எதிர்கொண்டது. அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியது பாமக. இதை அடுத்து 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு பாமக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இது ஒரு புறம் இருக்க 2026 தேர்தலை மையப்படுத்தி பாமகவுக்குள் உட்கட்சி விவகாரம் வெடித்திருக்கிறது. இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் அறிக்கை விட பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான் என பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அன்புமணி. தொடர்ந்து வன்னியர் சங்க மாநாடு நடைபெற்ற நிலையில் அங்கு தான் மோதல் உச்சத்தை தொட்டது. பல லட்சம் தொண்டர்கள் திரண்டு இருந்த மாநாட்டில் ராமதாஸ் தேவையில்லாத விஷயங்களை பேசி குழப்பியதாக தொண்டர்களே கூறுகின்றனர். பல லட்சம் செலவு செய்து வந்தது குடும்ப பிரச்சினையை கேட்கவா என வன்னியர் சங்கத்தினர் சமூக வலைதளங்களில் கொந்தளித்ததை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் ஒப்புதல் இன்றி ராமதாஸ் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். கிட்டத்தட்ட 230 மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இருக்கும் நிலையில் வெறும் 13 பேர் மட்டுமே ராமதாஸின் கூட்டத்திற்கு சென்றனர். மாநாட்டுக்கு வந்ததால் களைப்பில் இருப்பார்கள் என ராமதாஸ் கூறியிருந்தார். நேற்று நடைபெற்ற இளைஞர் அணி மகளிர் அணி கூட்டத்தையும் 98 சதவீத நிர்வாகிகள் புறக்கணித்தனர். இரு கூட்டங்களுக்கு முன்னதாகவே ராமதாஸ் தரப்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூட்டத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தியும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு செல்லவில்லை.
இதேபோல இளைஞர் அணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசியும் நேற்றைய கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து இருக்கின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் அன்புமணி தரப்பை தொடர்பு கொண்டு எங்களுக்கு அழைப்பு வந்தது ஆனால் நாங்கள் செல்ல மாட்டோம் உங்கள் பின் தான் நிற்போம் என கூறியிருக்கின்றனர். ராமதாஸின் வயது மற்றும் மனநிலையை பயன்படுத்தி குடும்பத்தில் இருக்கும் சிலரும் கட்சியில் இருக்கும் சிலரும் தவறாக வழிநடத்துவதாக ஏற்கனவே பாமகவினர் தொடர் புகார்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமகவில் ராமதாஸின் சகாப்தம் முடிவடைந்து கட்சி அன்புமணியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என்கின்றனர் பாமகவினர். தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி அரசியல் கட்சியை உருவாக்கியவர்கள் தங்கள் வாரிசுகள் வந்த பின்பு அவர்களிடம் தேர்தல் கூட்டணி கட்சி கட்டுப்பாடு உள்ளிட்ட பொறுப்புகளை கொடுத்து விட்டு மேற்பார்வை மட்டுமே செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ராமதாஸ் அப்படி செய்தாலும் சில நேரங்களில் "நான் தான் கட்சி.. கட்சியே நான் தான்" "நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்" என பேசியது அன்புமணியை மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தான் மாநாட்டில் ராமதாஸ் பேச்சு பலரையும் வேதனைக்கு உள்ளாக்க தற்போது ஒட்டுமொத்தமாக அன்புமணியின் பின்னால் வந்திருக்கிறார்கள் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாமகவினர்.












Click it and Unblock the Notifications