உங்க கண்ணுல ஒரு கலக்கம் தெரியுதே.. நமக்கான பஸ்ஸு ஒரு நாள் கண்டிப்பா வரும்! லெட்டரில் குமுறிய ராமதாஸ்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது பாமக. அன்புமணி ராமதாஸுக்கு தான் பாமகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவை சொந்தம் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் தொண்டர்கள் மனக்கலக்கத்தில் இருப்பதை தான் அறிந்துள்ளதாகவும், விரைவில் நமக்கான வாகனம் வரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அக்கட்சியில் நிறுவனரான ராமதாஸ்.
2026 தேர்தலில் கிட்டத்தட்ட தனித்து விடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். அன்புமணி தலைவராக பொறுப்பேற்ற நிலையில் கட்சி முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.
இந்த நிலை தந்தை மகன் இடையேயான மோதல் காரணமாக இரு தரப்பும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையமும் நீதிமன்ற தீர்ப்பும் வந்திருக்கிறது.

பாமக தலைமை மோதல்
இதனால் உற்சாகமடைந்திருக்கும் அவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இருக்கும் ராமதாஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் விசிகவின் நெருக்கடி காரணமாக திமுக கூட்டணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடந்த நிலையில் அதற்கும் விடை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ் அறிக்கை
அதில்," என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம். நான் நலம்! நீங்கள் நலம்தானே...? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள். நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம்.
2026 சட்டமன்ற தேர்தல்
சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம். இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
பாமக உள்கட்சி சிக்கல்
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications