பஞ்சாயத்து ஓவர்.. போய் (மாநாட்டு) வேலையப் பாருங்க! அன்புமணியை சந்தித்த முக்கிய புள்ளிகள்.. சுபம்.!
சென்னை: அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாகவும், தானே கட்சியின் தலைவராக தொடர்வேன் என அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ். அதற்கு பிறகு நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இடையில் சித்ரா பௌர்ணமி வன்னியர் மாநாடு தொடர்பாக 'பாமக நிறுவனர்' எனவே ராமதாஸ் அறிக்கை விட்டதால் பாமகவினர் நிம்மதி அடைந்தனர். இடையே வடிவேல் ராவணன், திலகபாமா இடையே மோதல் வெடித்த நிலையில் தற்போது இருவரும் அன்புமணி ராமதாசை சந்தித்திருக்கின்றனர். கட்சியில் எந்தவித சர்ச்சையும் இருக்கக்கூடாது மாநாட்டு வேலையை பாருங்கள் என அன்புமணி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால் இனி கட்சியில் பிரச்சனை இல்லை என்கின்றனர் பாட்டாளிகள்.
வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் முக்கிய முகமாக வலம் வருபவர் ராமதாஸ். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவராக இருந்து அரசியலுக்கு வந்தவர். மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இந்த நிலையில் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி 2016 தேர்தலை பாமக எதிர்கொண்டது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு அன்புமணி முதல்வர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அந்த தேர்தலில் எதிர்பார்க்காத தோல்வி தான் கிடைத்தது.
பாமக கலக்கம்:
அதற்கு பிறகு கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு, தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக மாற்றப்பட்டார். இதற்கிடையே கட்சியில் இளைஞரணி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்த போது ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் ராமதாஸால் நியமிக்கப்பட்டார். கட்சியில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திரை துறையில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
அன்புமணி ராமதாஸ்:
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸின் பேரன் முகுந்தன் இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட போது வெளிப்படையாகவே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது இருந்து அவருக்கும் ராமதாஸுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தான் தான் கட்சியின் தலைவர், அன்புமணி செயல் தலைவர் என அதிரடியாக அறிவித்தார். இதனால் கட்சியிலிருந்து அன்புமணியின் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் மூழ்கினர்.
ராமதாஸ்:
நிறுவனர் ராமதாஸ் வீட்டு முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. அப்போது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் பாமக பொருளாளரான திலகபாமா. திண்டுக்கல்லைச் சேர்ந்த அவர் வெளியூரில் திருமணம் முடித்தாலும் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில் அன்புமணி நீக்கம் தொடர்பாக முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்த அவர்,"பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு... அன்புதானே எல்லாம்" என பதிவிட்டிருந்தார்.
திலகபாமா விவகாரம்:
அன்புமணிக்காக ராமதாசையே அவர் வெளிப்படையாக விமர்சித்து பேசியது ஒருபுறம் ஆச்சரியத்தையும் ராமதாஸ் ஆதரவாளர்களிடையே எதிர்ப்பையும் பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து முகுந்தன் ஜிகே மணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அன்புமணி மற்றும் ராமதாசை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். இதற்கிடையே பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக நான் தான் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதோடு விரைவில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரம் காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
வடிவேல் ராவணன்:
அதே நிகழ்வுக்காக அறிக்கை வெளியிட்ட ராமதாஸ் பாமக நிறுவனர் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இந்த நிலையில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களிடையே மோதல் எழுந்தது. ராமதாசை கட்சியில் ஜனநாயகம் இல்லை என விமர்சித்ததாக பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக திரும்பினார் கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணன்.
பாமக நிறுவனர்:
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர்,"பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா என்பவர் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
நோய்க்கிருமி:
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக் குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி." என விமர்சித்திருந்தார்.
அன்புமணி:
இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுக்குள் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என நினைத்த அன்புமணி முக்கிய நிர்வாகிகளை அழைத்து சமாதானம் பேசி இருக்கிறார். அந்த வகையில் இன்று மோதலில் ஈடுபட்டிருந்த வடிவேல் ராவணன் மற்றும் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அன்புமணியுடன் இரு முக்கிய நிர்வாகிகளும் சுமார் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

வன்னியர் சித்திரை மாநாடு:
தொடர்ந்து கட்சியில் தலைவர் விவகாரம் தொடர்பாக யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கக் கூடாது. தற்போதும் எப்போதும் நான் தான் தலைவர். நிறுவனர் ராமதாஸ் சித்திரை முழு நிலவு மாநாட்டுப் பணிகளை எந்தவித தொய்வும் இல்லாமல் தொடர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். கட்சி நிர்வாகிகளும் எவ்வித பிரச்சனைகளுக்கும் யூகங்களுக்கும் இடம் கொடுக்காமல் பணிகளை கவனிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை எடுத்து போகும்போது கோபமாக சென்றவர்கள் வரும்போது மகிழ்ச்சியாக திரும்பி இருக்கிறார்கள். தொடர்ந்து கட்சியில் இனிமேல் பிரச்சினை வராது என நம்புவதாக கூறுகின்றனர் பாமகவினர்.












Click it and Unblock the Notifications