அரசியல் வனவாசம் போகும் ராமதாஸ்.. பவரை கையில் எடுத்த அன்புமணி! பொதுக்குழுவில் நடந்த மாற்றம்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும், நிறுவன தலைவர் ராமதாஸுக்கும் இடையில் இருந்த மோதல்கள் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றன. தான் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், இனி அன்புமணி கட்சியை வழிநடத்துவார் என்றும் ராமதாஸ் கூறியிருந்த நிலையில்.. இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், நிறுவனர் ராமதாஸ் தனது மகள் வழி பேரனான பரசுராமன் முகுந்தனை கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். இங்குதான் ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதல் வெடித்தது.

அதெப்படிங்க? கட்சியில் சேர்ந்து வெறும் 4 மாசம் ஆன ஒருத்தரை மாநில பொறுப்புக்கு கொண்டுவர முடியும்? வேறு யாராவது திறமையான ஆளை கொண்டு வாங்க.. என்று அந்த கூட்டத்தில் அன்புமணி வாயை விட.. டென்ஷன் ஆன ராமதாஸ், இது என் கட்சி.. நான் சொல்றதை கேட்கிறவர்கள் இங்கு இருக்கலாம்.. இல்லையெனில் போகலாம் என்று சொல்லிவிட்டார். இதை கேட்ட அன்புமணி உடனே மைக்கை தூக்கி வீசிவிட்டு நடையை கட்டிவிட்டார்.
அதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவருக்கும் இடையில் மோதல் தீவிரமாக வெடித்தது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி, அன்புமணி மீது ஒழுங்கீனம் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாக.. 19 குற்றச்சாட்டுகளை அடுக்கி விளக்கம் கேட்டு ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு தைலாபுரம் தோட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், கட்சி நிர்வாகிகளின் ஆதரவு முழுமையாக எங்களுக்கு இருக்கிறது.. அன்புமணிதான் தலைவர் என்று அவரது தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு அதில் வெற்றியும் கண்டது.
இதையடுத்து சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இரண்டு பிரிவுகளாக பிரிந்த ராமதாஸ்-அன்புமணி அணி, தனித்தனியாக போட்டியிட்டது. ராமதாஸ் தரப்பு சசிகலாவுடன் கூட்டணியிலும், அன்புமணி அணி பாஜக கூட்டணியிலும் போட்டியிட்டது. இதில் அன்புமணி அணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ராமதாஸ் அணி எதிலும் வெற்றிப்பெறவில்லை.
இதையடுத்து ராமதாஸ் தனது 88வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய போது, தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், இனி கட்சியை அன்புமணி வழிநடத்துவார் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இன்று பொதுக்குழுவில் அன்புமணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பவர் சென்டராக அன்புமணி உருவாகியுள்ளார். அதேபோல கட்சியின் பொருளாளராக திலக பாமா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
