போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க இது தான் ஒரே வழி! அரசுக்கு யோசனை தரும் அன்புமணி ராமதாஸ்!
சென்னை: போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் விநியோகம் செய்பவர்களை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வியாபாரிகளை கைது செய்வதால் பெரியளவில் எந்த பயனும் இல்லை என்றும் 10 நாட்களில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள் எனவும் கூறினார்.
போதைப் பொருட்கள் ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் பாட்டாளி மக்கள் கட்சி மிக உறுதியாக நிற்பது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருட்கள்
தமிழகத்தில் போதைப் பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. மது, போதைப் பொருள், ஆன்லைன் சூதாட்டம் என குடும்பங்களை சீரழிக்கும் அனைத்து நச்சுக்களுக்கு எதிராகவும் அக்கட்சி போராட்டம், ஆர்ப்பாட்டம் என அவ்வப்போது நடத்தி வருகிறது. இதனிடையே தமிழக அரசும் தற்போது போதைப் பொருட்கள் ஒழிப்பில் மிகத் தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அன்புமணி கருத்து
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இது தொடர்பாக அளித்த பேட்டியில், போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களில் 9 விழுக்காடு பேர் மாணவர்கள் என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சித் தரதக்க வகையில் இருப்பதாக கூறினார். மேலும் எளிதாக கிடைப்பதால் 28 விழுக்காடு பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கும் தகவலையும் வெளியிட்டார். எனவே கண் துடைப்புக்காக அங்கும் ஒன்றும் இங்கு ஒன்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் போதைப் பொருட்கள் எங்கிருந்து விநியோகம் ஆகிறது என்ற மூலக்காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்களை கூண்டோடு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

15 ஆண்டுகாலம்
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளில் தான் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அடுத்த தலைமுறைகளை போதைப் பொருட்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் எனக் கூறினார். எங்கே பார்த்தாலும் எளிதாக போதை வஸ்துகள் கிடைப்பதே அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.

கூடுதல் காவலர்கள்
போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்ற யோசனையும் அவர் அரசுக்கு அளித்திருக்கிறார். போதைப் பொருட்கள் ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகளை காட்டிலும் பாட்டாளி மக்கள் கட்சி மிக உறுதியாக நிற்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications