விஜய்: கூட்டணிக்கு வரும் பாமக.. சௌமியா அன்புமணிக்கு முக்கிய அமைச்சர் பதவி ரெடி!
சென்னை: தமிழக அரசியல் களம் இன்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களுக்குக்கான ஆதரவை திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதேவேளையில் நாளை விஜய் முதல்வராக பதவியேற்பார் என்ற தகவலும் வந்துக்கொண்டு இருக்கிறது.

தவெகவின் நிலைமை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியை அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இன்னும் 10 உறுப்பினர்களின் உதவி அவர்களுக்கு அவசியமாகிறது.
திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகளை விட்டு வெளியே உள்ள 20 எம்.எல்.ஏக்களிடமிருந்து இந்த ஆதரவைப் பெற தவெக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சிறு கட்சிகளின் முடிவுகள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க உதவ உள்ளது. தற்போது விஜய் தலைமையிலான தவெக கட்சி காங்கிரஸ் மற்றும் பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு
தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும் இன்னும் ஐந்து இடங்களின் ஆதரவு தேவைப்படுவதால், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சௌமியா அன்புமணிக்கு சுகாதார அமைச்சர் பதவி
தவெகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமகவிடம் இருந்து ஆதரவு பெற சௌமியா அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு பெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சு சுமூகமாக முடிவடைந்தால் பாமகவின் நான்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு தவெகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசில் முக்கிய அமைச்சர் பதவியை சௌமியா அன்புமணி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக கட்சி ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் சென்னை பனையூரில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாமக, தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்து இந்த கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்க உள்ளது. தவெக பெரும்பான்மையை இன்னும் எட்டாத நிலையில் இந்த ஆதரவு தவெக-வுக்கு மட்டும் அல்லாமல் பாமக-விற்கும் பலமாக மாறும்.
தருமபுரியில் சௌமியா-வின் மெகா வெற்றி
பாமகவின் கோட்டையாக தருமபுரி தொகுதி விளங்குகிறது, இத்தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 20,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தவெகவின் விஜய் அலை மற்றும் தன் மாமனார் ராமதாஸின் எதிர்ப்பைத் தாண்டி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பாமகவின் சிட்டிங் தொகுதியான தருமபுரியில் தொடர்ந்து ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் பல மாதங்களாக தீவிரமாகப் பணியாற்றினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாத நிலையில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த அவர், இம்முறை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தருமபுரியில் தீவிரம் காட்டி வந்தார். இந்த மாபெரும் வெற்றி அவருக்கு தவெக அரசில் சுகாதார அமைச்சர் பதவி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.















Click it and Unblock the Notifications