“மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை" - பாமக தலைவர் அன்புமணி ட்விஸ்ட்
சென்னை: நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி உள்ளது.

இந்த 5 கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூகத்தினரின் வாக்குகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. அதனால் பாமக ஆதரவை பெறும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது.
பாமக தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமது முடிவை அறிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
அதன்படி, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மிகப்பெரிய 'ட்விஸ்ட்' கொடுத்துள்ளார் அன்புமணி.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டிருந்தது பாமக. பாமக சார்பில் சௌமியா அன்புமணி உள்ளிட்ட 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இந்தச் சூழலில், அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காமல், யாருக்கும் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அன்புமணி.


Click it and Unblock the Notifications
