பாமக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை.. ஜான் ஆரோக்கியசாமி மூலமாக தூதுவிட்ட விஜய்?
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக - தவெக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டிலேயே ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடன் கைகோர்க்கும் என்று விஜய் எதிர்பார்த்தார். ஆனால் திமுக கூட்டணி வலுவாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்பின் அதிமுக - தவெக கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகின.

தவெக அறிவிப்பு
ஆனால் தவெக தலைமையில் தான் கூட்டணி என்று கடந்த அக்.27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின் இதுவரை எந்த கட்சியும் விஜய் தரப்புடனோ அல்லது தவெக நிர்வாகிகளுடனோ இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுக ஆகியோர் தவெக தங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைத்து வருகிறார்கள்.
ஜான் ஆரோக்கியசாமி நட்பு
ஆனால் தேமுதிக, தமாகா உள்ளிட்ட 1 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகள் கூட தவெகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்த நிலையில் தவெகவின் தேர்தல் வியூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல்பட்டு வருகிறார். இவர் 2016ஆம் ஆண்டு மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று பாமகவுக்காக தேர்தல் பணியாற்றியவர்.
தவெக - பாமக
இந்த நிலையில் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக பாமகவை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாமகவின் அன்புமணி தரப்புடன் இந்த பேச்சுவார்த்தையை தவெக தொடங்கி இருக்கிறது.
அதிமுகவுடன் கருத்து வேறுபாடு
வடமாவட்டங்களில் பாமக கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது. பாமக இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவை தேர்தலில் பாமக - அதிமுக இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் பாமக நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்த்து வந்துள்ளது.
விஜய் மீது விமர்சனமில்லை
ஆனால் நடிகர் விஜய் கட்சி தொடங்கி சுமார் ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர் மீது அன்புமணி இதுவரை எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை. தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாகவே விஜய் மீது விமர்சனத்தை முன் வைக்கவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications