சமூக நீதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்த மர்மம் என்ன? ஸ்டாலின் கேள்வி
சென்னை: எந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்தின் மேன்மைக்காக திட்டங்களை தீட்டி நிறைவேற்றுகிற இயக்கம் தான் திமுக. ஆனால் சமூக நீதி பேசுகிற டாக்டர் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்த மர்மம் என்ன? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. அந்த வகையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எந்த சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்தின் மேன்மைக்காக திட்டங்களை தீட்டி நிறைவேற்றுகிற இயக்கம் தான் திமுக. ஆனால் சமூக நீதி பேசுகிற டாக்டர் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்த மர்மம் என்ன?.. பாமக வலியுறுத்துகிற ஒரு கொள்கைக்கு கூட ஆதரவு தெரிவிக்காதது தான் பாஜக.. அதற்கு முற்றிலும் எதிரான கொள்கையை கொண்டது பாஜக.
இது மூத்த தலைவரான டாக்டர் ராமதாசுக்கு தெரியாதா? நான் மட்டும் சொல்லவில்லை. மனசாட்சி உள்ள பாமக தொண்டர்கள் கூட வேதனையுடன் இருக்கிறாங்க. ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே மண்டல் கமிஷன் பற்றி.. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய நேரத்தில் எத்தனை கலவரங்களை திட்டமிட்டு பாஜக செய்தது. விகே சிங்கின் ஆட்சியை பாஜக கவிழ்த்ததே.
இப்போது கூட பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீட்டை முழுமையாக க்ளோஸ் பண்றதுக்காக எவ்வளவு படுபாதக செயல்களை பாஜக செய்தது என்பதை மறந்துவிட்டாரா?.. 2021 ல் நடந்து இருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போது இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது பாமக.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது அந்த கோரிக்கையை மோடி ஏற்றுக்கொண்டுள்ளாரா? மோடி இப்போ கேரண்டி கேரண்டி என்று விளம்பரம் கொடுக்கிறாரே.. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? அய்யா ராமதாஸ் அவர்கள் மோடியிடமோ? அல்லது அமித்ஷாவோடோ அதற்கான உத்தரவாதத்தை பெற்றுள்ளாரா?
10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்பு திட்டங்கள் செய்தார்கள் என்று பாமகவினரால் சொல்ல முடியுமா?.. தமிழ்நாட்டுக்கான சிறப்பு திட்டங்களில் ஒன்றைக்கூட பாஜகவால் பட்டியல் போட முடியவில்லை. சமூக நீதி பற்றி பேசும் பாமக சமூக நீதிக்கு எதிரான பாமகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பதில் தங்கமலை ரகசியம் எல்லாம் இல்லை. ஏன் கூட்டணி அமைத்தார் என்று மக்களுக்கும், பாமகவினருக்கும் நன்றாக தெரியும். மனம் இன்றி பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றுள்ளார் என்பது பாமக தொண்டர்களுக்கே தெரியும்.
அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடியின் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் போதே மோடியின் தோல்வி பயம் தெரிந்துவிட்டது. மக்கள் மீது இரக்கமும், பாசமும் இருக்க கூடியவரா மோடி?.. ஏழை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தில் 100 நாள் வேலை திட்ட நிதியை பாஜக அரசு குறைத்துள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications