ஜெய்பீம் பக்கம் நிற்பது பாசிசம்! வன்னியர்களை குற்றவாளியாக ஏன் சித்தரிக்கனும்?கவிஞர் பச்சியப்பன்
சென்னை: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் அந்த படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வன்னிய சமூகத்தை குற்றவாளியாக சித்தரிக்கிறது என்பதுதான் பிரச்சனைக்கே காரணம்; இதனை புரிந்து கொள்ளாமல் சூர்யாவின் பக்கம் நிற்பது பாசிசப் போக்குதான் என்று கவிஞர் பச்சியப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் பச்சியப்பன் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: முற்போக்கு என்கிற போர்வையில் இன்றைக்கு பாசிச மே வளர்ந்து நிற்கிறதோ என்று தோன்றுகிறது. அனைத்தையும் சந்தேகப்படு என்ற குரலை ஒலித்தவர்கள் இன்று பொய்யை நியாயப்படுத்தும் பாசிசத்திற்கு வந்தடைந்து இருக்கிறார்கள். ஊடகத்தில் திரைத்துறையில் அரசியலில் அதிகாரத்தில் பொருளியலில் வலுவாக காலூன்றிய இவர்கள் விளிம்புநிலை மக்களின் மீது வன்மத்தை காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

குற்றவாளியாக வன்னியர்
ஜெய்பீம் திரைப்படம் சற்றும் தொடர்பில்லாத வன்னிய சமூகத்தை குற்றவாளியாக காட்டியிருக்கிறது என்பதுதான் அந்த விளிம்பு நிலை மக்களின் அடிப்படையான குரல். ஆனால் அதற்கு நேர்மையாக பதில் சொல்லாமல் அவர்களின் படிப்பறிவை பொருளாதார நிலையை இயலாமையை குத்திக்காட்டி மிக மோசமான முறையில் விமர்சிப்பது இவர்களது பதிலாக இருக்கிறது. எந்த அறிவைக் கொண்டு பார்ப்பனியம் தன்னை உயர்ந்த நிலையாகக் கருதிக் கொண்டதோ அதே போல இவர்களும் தங்களது அறிவைக் கொண்டு மேட்டிமை இடத்திற்கு வந்துவிட்டார்கள். பொய்தான் மிக மோசமான ஆபாசம். அந்த ஆபாசத்தை ஆதரிப்பது என்பது ஆபத்தானது.

வன்னியரும் கவுண்டரும்
மையமாகத் திரண்டுவிட்டார்கள் என்பதற்குரிய பண்புகளில் முதன்மையானது விளிம்புநிலை மக்களின் இயலாமையைக் கேலி செய்து பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். அதைவிட முதன்மையானது எதிர்த்து எழுதுகிறவர்களின் மனதில் அச்சத்தை விதைப்பது ஆகும். இவர்களை ஆதரித்தால் விருது. எதிர்த்தால் இருக்கவே இருக்கிறது முத்திரை. இந்த முத்திரைக்கு அஞ்சாதோர் யார்தான். ஜெய்பீம் திரைப்படம் நாட்காட்டியில் மட்டுமே தனது தவறைச் செய்யவில்லை. தொடக்கக் காட்சியில் இருந்தே தனது சதி வலையைப் பின்னத் தொடங்குகிறது. திரைப் படத்தின் தொடக்கக் காட்சியைக் கவனியுங்கள். சிறை வாசலில் ஒவ்வொரு குற்றவாளியும் காவல்துறையிடம் தமது சாதியைச் சொல்லுவார். எல்லோருக்கும் தோற்றத்தைக் காட்டுகிற இந்தப்படம் கொங்கு வேளாள கவுண்டர் எனும் குரலுக்கு உரியவரை காட்டத் தவறுவது ஏன்? இது சூர்யாவின் சொந்த சுயசாதிப் பற்று அல்லாமல் வேறு என்ன? வன்னியரைப் பஞ்சைப் பராரியாகக் காட்டும்போது கவுண்டர் எப்படி இருப்பார் காட்டுவதில் என்ன சிக்கல்?

மணிரத்னத்தை கேள்வி கேட்டார்கள்..
இவர்களின் அதீத நம்பிக்கை விளிம்புநிலை மக்களுக்கு இது புரியாது என்பதுதான். அதிகாரம் எல்லா வாசல்களையும் அடைத்துவிடும்தானே. மும்பை திரைப்படம் வந்தபோது ''இஸ்லாமியர்கள் அடிக்கிறபோது மட்டும் அண்மைக் காட்சியாக வைக்கிற மணிரத்தினம் இந்துக்கள் அடிக்கிற போது சேய்மை காட்சியாக வைப்பது ஏன்'' என்று கேள்வி கேட்டவர்கள்தான் இவர்கள்.
Recommended Video

பாசிஸ்டுகளால் தாங்க முடியவில்லை
திரைப்படம் காட்சி மொழிகளால் பின்னப்படுவது ஆகும். பேசுகிற வசனங்களுக்கு அப்பாற்பட்டு காட்சியால் பல செய்திகளை அது உணர்த்தும். இந்தப்படம் நுட்பமாக காட்சி வாயிலாக விளிம்புநிலை மக்களைக் குற்றவாளிகளாக சித்தரிக்கிறது. இதை எதிர்த்து அந்த விளிம்புநிலை மக்களின் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சிறு எதிர்ப்பை காட்ட முயல்வதைக் கூட இந்த பாசிஸ்டுகளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இத்தனைக்கும் இவர்களுக்காக பூனையை மறித்துப்பார் புலியின் சீற்றம் காண்பாய் என்று கவிஞர் இன்குலாப் எழுதிவிட்டுப்போயிருக்கிறார்.

ஆதரித்து பேசினால் பாய்ச்சல்
பெயரில் எல்லாம் இருக்கிறது என்றகுரல் இவர்களின் கடந்தகாலம். பெயரில் என்ன இருக்கிறது என்பது இன்றைய முகம். விளிம்பின் குரலில் அறத்தைத்தேடும் இவர்கள் மையத்தின் வன்மத்தை கேள்வி கேட்பதே இல்லை. விடுதலைப்புலிகளை கேள்வி கேட்பார்கள். சிங்களப் பேரினவாதம் எனில் வாயை மூடிக்கொள்வார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் அதிகாரமையம்தான் ட்ரென்ட் மையத்தை நோக்கி நகர்ந்து இருக்கும். இவர்கள் விளிம்பு நிலை மக்களுக்காக ஆதரித்து பேசுகிறவனைக்கூட எளிதாக விட்டுவிடவில்லை. அவர்களின் மீது பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறார்கள். இந்த பாசிசப் போக்கு விளிம்பு நிலை மக்களுக்கு நன்மை பயக்காது என்பதைப்புரிந்துகொண்டுதான் எந்த முற்போக்கு முகமூடியையும் விளிம்புநிலை மக்கள் நம்புவதேயில்லை. அவர்கள் உண்மையின் பக்கம் நின்று களமாடுகிறார்கள். தங்களுக்கு வரும் இழப்புகளைக் கணக்கில் கோள்வதே இல்லை. ஏனெனில் எந்தக்கதவையும் அவர்கள் தட்டுவதேயில்லை. அவர்கள் மண்ணையும் மழையையும் நம்புகிறார்கள். அது இவர்கள் பக்கம் நிற்கிறது. இவ்வாறு கவிஞர் பச்சியப்பன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications