சென்னையில் தெருநாய்களுக்க்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது போலீசில் புகார்
சென்னை: சென்னை கண்ணம்மாபேட்டை விலங்குகள் கருத்தடை மையத்தில் மருத்துவ அலட்சியம் காரணமாகப் பல அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்ததாகவும், நாய்கள் உயிரிழந்ததாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளார்கள். இந்த விவகாரத்தில் அங்கு பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் மீது சென்னை மாநகராட்சி விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவத் துறை மூத்த அதிகாரி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் , விலங்கு நல ஆர்வலர்கள் குறிப்பிட்ட மூன்று நாய்களுக்கும் ரேபிஸ் பாதிப்பு இருந்தது. அவற்றில் ஒரு நாய் திங்கள்கிழமையும், மற்ற இரண்டு நாய்கள் கடந்த மாதமும் உயிரிழந்தது.

ஆனால், அந்த மூன்று நாய்களுக்கும் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. அதனால் அவற்றுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதை ஊழியர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றார்.
இதற்கிடையே, திங்கள்கிழமை காலை உயிரிழந்த பெண் நாய் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை கண்ணம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த நாய் கூண்டுக்குள் கடுமையான ரத்தப்போக்குடன், குடல் வெளியே தள்ளப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய இருந்ததாக கூறினார்கள்.
புகார் அளித்த விலங்கு நல ஆர்வலர் இ. மார்டினா கூறும் போது, "அந்தப் பெண் நாய்க்கு பரவக்கூடிய பால்வினைக் கட்டி நோய் ) இருந்ததால், அதை அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் சென்றிருக்கவே கூடாது" என்று கூறினார். பெசன்ட் மெமோரியல் விலங்குகள் மருந்தகத்தின் இயக்குநர் ஷ்ரவன் கிருஷ்ணன், ரேபிஸ் பாதித்த நாய்களுக்கு சென்னை மாநகராட்சி எவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மூன்று நாய்களுக்கும் ரேபிஸ் பாதிப்பு இருந்ததாக சென்னை மாநகராட்சியே தெரிவித்துள்ளது. அப்படியானால், மாநகராட்சி மேற்கொள்ளும் ரேபிஸ் தடுப்பூசித் திட்டம் என்னவானது? அந்தத் தடுப்பூசிகள் செயலிழக்கின்றனவா? அந்த நாய் தனது உறுப்புகள் வெளியே வரும் அளவுக்கு தன்னைத்தானே கடித்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு முன்பே சிகிச்சை அளிக்க யாரும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேநேரம் இப்படியான புகார்கள் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் பணியில் கடுமையான நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. அறுவை சிகிச்சையில் அலட்சியம் ஏற்பட்டு நாய்கள் உயிரிழந்தால், பொதுமக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் மையங்களின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழக்கும் அபாயம் இருக்கிறது.
அதேபோல் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்க தொடங்கினால், விசாரணை, நடவடிக்கை என செல்வதால், மருத்துவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறி, அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை குறைப்பார்கள். தெருநாய்களை பிடித்து வரும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுவதற்கு அச்சப்படும் நிலையும் வரும். ஏற்கனவே தெருநாய்களை பிடிக்க சென்றால், விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பதால், பல ஊர்களில் அந்த பணிகளை செய்ய ஊராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் முன்வருவது இல்லை என்று கூறப்படுகிறது. காவல் நிலையங்களில் புகார்களும் எழுந்தால், எதற்கு வம்பு என்று ஒதுங்கவும் வாய்ப்பு அதிகம்.
தெருநாய்கள் கட்டுப்பாட்டுத் திட்டமே முடங்கும் அபாயம்
விலங்குகள் கருத்தடை மைய திட்டத்தில் நாய்களைப் பிடிப்பது, கருத்தடை செய்வது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, மீண்டும் அதே பகுதியில் விடுவது எனப் பல கட்டங்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஊழியர்கள் அல்லது மருத்துவர்கள் ஈடுபடத் தயங்கினால்கூட ஒட்டுமொத்தத் திட்டத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications
