தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி...ஏப்.16ல் நடத்த காவல்துறை அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் 45 இடங்களில் வரும் 16ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து வரும் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications