டக்னு போலீஸ் குடியிருப்புக்கு போன ஆபிசர்ஸ்! கண்ட காட்சி நிஜமா? மேல் வாடகையா? தமிழகம் முழுதும் ஆய்வு
சென்னை: போலீசாருக்கு அரசு தரப்பில் வழங்கும் குடியிருப்புகள், சில அதிகாரிகளால் குத்தகைக்கும், மேல்வாடகைக்கும் விடப்படுகின்றன என்ற சர்ச்சை புதிதாக தற்போது வெடித்துள்ளது.. இந்த புகாரை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காவலர் குடியிருப்புகளில் பரவலான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது... என்ன நடந்தது?
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் மூலம், ஆயுதப்படை காவலர்கள் முதல் DSP நிலை அதிகாரிகள் வரை, ஆன்லைன் விண்ணப்பத்தின் அடிப்படையில் குறைந்த வாடகைக்கு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன..

அந்தவகையில் இதுவரை மொத்தம் 4991 வீடுகள் "உங்கள் சொந்த இல்லம்" என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.. மேலும் 54445 வாடகை குடியிருப்புகள் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது கணவன், மனைவி 2 பேரும் போலீஸ் துறையில் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், சிலர் அரசியல்வாதிகள், அல்லது உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளை பயன்படுத்தி சீனியாரிட்டி லிஸ்ட்டையும் மீறி, சம்பந்தப்பட்டவர்கள் வீடு பெற்றுவிடுகிறார்களாம்..
வாடகைக்கு விட்டு சம்பாத்தியம்
ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, வீடு கிடைக்கும் என்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான போலீசார் இருக்கும்போது, வீடு கிடைத்தவர்கள் அதையே வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு மாற்றுவது போன்ற முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் குவிந்துவிட்டதாம்.
ஏற்கனவே காவலர் குடியிருப்புகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக லைன் ஆர்டலி என்று சொல்லப்படும் நபர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.. போலீஸ் குடியிருப்புகளில் என்னென்ன முறைகேடுகள் நடக்கின்றன என்பதையெல்லாம் கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு எடுத்து செல்வதுதான் இவர்களின் பணியாகும்.. ஆனால் இவர்கள் அப்படி செய்வதில்லை.
சொந்தக்காரர்களுக்கு வாடகை
வீட்டை பெற்றவர்கள் சொந்த ஊரில் இருந்தால், தங்களின் சொந்தக்காரர்களுக்கு அந்த வீட்டை தந்துவிடுகிறார்களாம்.. சொந்த வீடு கட்டிய போலீசாரும், காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டை மற்ற போலீசாருக்கு மேல் வாடகைக்கு விடுகிறார்கள்.. ஒருசிலர் 5 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கும் விட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதனால்தான், ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் உண்மையில் அந்த அதிகாரிகள் தங்குகிறார்களா? என்பது குறித்து அனைத்து பகுதிகளிலும் தீவிரமான ஆய்வு நடைபெற்று வருகிறது.
கூண்டோடு சிக்கிய 250 பேர்
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டு வீடு கிடைக்காமல் பலரும் காத்திருக்கும்போது, அவர்களுக்குரிய வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் குடியிருப்புகளில் வசிக்கின்றனரா என்பதை உறுதி செய்ய இந்த ஆய்வு மாநிலம் முழுவதும் கையில் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இதுவரை ஆய்வு செய்ததில் சென்னையில் மட்டும் 250 பேருக்கு மெமோ தரப்பட்டுள்ளதாம். முறைகேடு புகார்களால்தான், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் குடியிருப்புகளில் வசிக்கின்றனரா என்பதை உறுதி செய்ய மாநிலம் முழுதும் தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வரும்நிலையில், இதில் மேலும் பலர் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையானது, மேல் வாடகைக்கு விடும் போலீசாரின் வயிற்றில் கிலியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications