திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதால் முதியவர் உயிரிழக்கவில்லை.. காரணமே வேறு.. போலீஸ் விளக்கம்
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் பலியானதாக சொல்லப்படுவதை போலீஸார் மறுத்துள்ளனர். மருத்துவர்களும் அவர் இறந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் வடக்கு மாட வீதியில் 80 வயது முதியவர் சுந்தரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செவித் திறனற்ற மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியாவார்.

அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மாடு, சுந்தரத்தின் மீது முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார். அவருடைய கண் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் முதியவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். இந்த நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது.
இந்த மாடு கோயிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டு வந்த நிலையில் அதை பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் மறுத்திருந்தது. மாடு சுற்றித் திரிவது குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறியிருப்பதாவது: காவல்துறையுடன் இணைந்து மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், பூக்கடை பகுதியில் 120 மாடுகள், பழைய வண்ணாரப் பேட்டையில் 3, புளியந்தோப்பில் 48, அண்ணாநகரில் 269, கொளத்தூரில் 12, கோயம்பேட்டில் 513, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்பகுதியில் 367, கீழ்ப்பாக்கத்தில் 95, அடையாறில் 177, தியாகராய நகரில் 145 என சென்னை மாநகர் முழுவதும் 1,986 மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதாகக் கண்டறிந்திருக்கிறோம்.
மாடுகளைப் பிடிக்கச் சென்றால், மாநகராட்சி பணியாளர்களை மிரட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அந்த பிரிவின் கீழும், அரசு அலுவலரை பணி செய்ய விடாமல்தடுத்ததற்காகவும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முதியவர் சுந்தரம் மாடு முட்டியதால் இறக்கவில்லை என்றும் அவர் நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்றும் போலீஸாரும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். முதியவருக்கு மாடு முட்டியதில் கண் பகுதியில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன, அவ்வளவே ! மற்றபடி அவர் இறந்தது நுரையீரல் தொற்றால்தான் என குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications