ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு... அரசியல் தலைவர்கள இரங்கல்
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்,
தமிழகத்தில் கடந்த வாரம் தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைந்து போட்டியிட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளில் களமிறங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் போட்டியிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்
இருப்பினும், பிரசாரத்தின் போதே அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடைசி சில வாரங்கள் அவரது மகளே பிரசாரத்தை முன்னின்று நடத்தி வந்தார். மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று காலை மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாதவராவ் சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டசபைக்குள் நுழைந்திருக்க வேண்டியவர்
வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் - சட்டமன்ற உறுப்பினராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கரூர் எம்பி ஜோதிமணி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி, ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்களின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ,காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அண்ணாரது ஆன்மா அமைதிகொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன் இரங்கல்
கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில், ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம்வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கின்றேன் எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications