Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மாற்றுக் கொள்கை என்றாலும் மரியாதை பாராட்டியவர்” இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று காலமான நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தவர் மறைந்த இல. கணேசன். சிறுவயதிலேயே தந்தையை இழந்து, பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈர்ப்பு கொண்டு அதில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேரச் செயல்பாட்டாளராக இயங்க ஆரம்பித்தார். திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்விற்கு தனது வாழ்வை அர்ப்பணித்த இல. கணேசன், பாஜகவில் இணைந்து செயலாற்றினார்.

Political Leaders Including CM Stalin Condole Death of Nagaland Governor La Ganesan

செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த இல. கணேசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை தேசிய பாஜக வழங்கியது. 2021ஆம் ஆண்டு மணிப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இல. கணேசன், 2023ல் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, அம்மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில், நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு சென்னை வந்த இல. கணேசன், கழிவறையில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் இன்று மாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இல.கணேசன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை தியாகராய நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்து நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.

இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர்.

மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார். என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். அவரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம்.

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

La Ganesan mk stalin bjp

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகக்கூடிய இல.கணேசன் ஆளுநர், எம்.பி. உள்ளிட்ட பல பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர். இல.கணேசனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன் இரங்கல்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.

மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநராக தனது சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்த அய்யா இல. கணேசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நமது பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை இரங்கல்

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில், "நாகலாந்து ஆளுநரும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இல.கணேசன் அவர்கள் எளிமையானவர். பண்பாளர். அவரது மறைவு, அரசியல் துறைக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பாகும். இக்கடினமான நேரத்தில், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+