பொங்கல் வேட்டி, சேலை கூலி உயர்வு.. நெசவாளர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் அறிவித்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது.. புதிய ரக வேட்டி, சேலைகளை தயாரிக்க கூடுதல் செலவாகும் நிலையில், நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கூலியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஒரு சேலைக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்? வேட்டிக்கு எவ்வளவு கிடைக்கும்? இதன் பின்னணியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஆடைகள் கிடைப்பதுடன், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

Pongal Dhoti Saree Wage Hike Weavers Tamil Nadu News

விசைத்தறி நெசவாளர்கள்

2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு புதிய ரக வேட்டி, சேலைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உற்பத்திப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த முறை வேட்டி, சேலைகளில் புதிய வடிவமைப்புகள் மற்றும் நூல் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. சேலைகளில் பாலிகாட் பாவு நூல், பருத்தி ஊடை நூல், பாலியஸ்டர் ஜரிகை பார்டர் நூல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வேட்டிகளில் பாலிகாட் பாவு நூல், பாலிகாட் ஊடை நூல், பாலியஸ்டர் பார்டர் நூல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

இதில் முக்கியமான மாற்றம் என்னவென்றால், இந்த முறை வேட்டிகள் 3.75 மீட்டர் நீளத்துக்கு பதிலாக 2 மீட்டர் நீளத்தில் தயாரிக்கப்படுகின்றன. சலவை செய்யப்பட்ட வேட்டிகளாகவே பயனாளிகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ரக வேட்டி, சேலைகள்

இந்த புதிய ரக வேட்டி, சேலைகளை தயாரிக்க கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 2026 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்துக்கு உற்பத்தி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய ரக வேட்டி, சேலைகளை தயாரிக்கும்போது ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப நெசவுக் கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

குறிப்பாக, வேட்டியின் நீளம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள், நூல் மற்றும் இதர பொருட்களின் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூலியை நிர்ணயிக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 5 பேர் கொண்ட கூலி நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நெசவாளர்களிடம் கூலி உயர்வு தொடர்பான கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். புதிய ரக வேட்டி, சேலைகளின் தன்மையையும் உற்பத்திச் செலவுகளையும் ஆய்வு செய்து கூலியைப் பரிந்துரைப்பது இந்தக் குழுவின் பணியாக இருந்தது.

இயக்குநர் அரசுக்கு வைத்த கோரிக்கை

இப்போதுள்ள விலைவாசி உயர்வு, புதிய ரக வேட்டி, சேலைகளை தயாரிப்பதால் ஏற்படும் கூடுதல் செலவுகள், உற்பத்தியில் ஈடுபடும் நெசவாளர்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூலியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதையடுத்து, கைத்தறி இயக்குநர் பெடல் தறி மற்றும் விசைத்தறியில் தயாரிக்கப்படும் புதிய ரக வேட்டி, சேலைகளுக்கான நெசவுக் கூலியை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார். நெசவுக் கூலி நிர்ணயக் குழுவின் ஆய்வு மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய கூலி விவரங்களும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, தற்போது புதிய ரக வேட்டி, சேலைகளுக்கான கூலியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒரு சேலைக்கு ரூ.125.72 கூலி!

அதன்படி, பெடல் தறியில் தயாரிக்கப்படும் ஒரு சேலைக்கு மொத்தக் கூலியாக ரூ.125.72 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.97.72, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.28 ஆகும்.

அதே பெடல் தறியில் தயாரிக்கப்படும் ஒரு வேட்டிக்கு மொத்தக் கூலியாக ரூ.49.99 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.36.99, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.13 ஆகும்.

விசைத்தறியைப் பொறுத்தவரை, ஒரு சேலைக்கு மொத்தக் கூலியாக ரூ.54.81 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.45.76, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.9.05 ஆகும்.

ஒரு வேட்டிக்கு மொத்தக் கூலியாக ரூ.23.34 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நெசவுக் கூலி ரூ.19.04, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி ரூ.4.30 ஆகும்.

கூடுதலாக ரூ.13.66 கோடி செலவு

இந்தக் கூலி உயர்வால் 2026-27 நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.13.66 கோடி செலவாகும். இந்தத் தொகையை ஏற்கெனவே வரவு செலவுத் திட்டத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து செலவிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே, தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலியில் 10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயர்த்தி வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த உயர்வு செப்டம்பர் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். அதே நேரத்தில், அவற்றை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு முறையான கூலி கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காகவே புதிய ரக வேட்டி, சேலைகளுக்கான கூலியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+