எடப்பாடியே எதிர்பாராத டிவிஸ்ட்.. எஸ்பி வேலுமணி யூடர்ன்.. அதிமுகவில் அரங்கேற போகும் மாற்றம்
கோவை: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எஸ்பி வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தி அதிரடி முடிவு எடுக்க போவதாக தகவல் வெளியானது. வேலுமணி தவெக செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வேலுமணி பரபரப்பு விளக்கமளித்துள்ளார்.
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்ந்த இயக்கம். 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம். எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். எங்களை உருவாக்கியது அதிமுக. பத்திரிகைகள் தான் நான் தனி கூட்டம் நடத்துவதாக செய்தி வெளியிடுகிறார்கள். நான் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதுமே நிர்வாகிகள் அன்பாக பார்ப்பார்கள். அதுவேறு. சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் வருவது இயல்பு.

கட்சி ஒன்றுபட வேண்டும்
மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் தோல்விக்கு பிறகு பத்திரிகைகள் எதையாவது பேச விரும்புகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு இதே தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது அந்த இரண்டு தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதற்கு முன்பு நடந்த தேர்தலில் நான் தான் தாராபுரத்தில் முழுமையாக வேலை பார்த்தேன். அன்றைக்கு 80,000 வாக்குகளுக்கு மேல் வாங்கினோம். வெற்றி பெற வைத்தோம். அதிமுகவுக்கு விழும் வாக்குகள் இப்போது குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
இந்தமுறை எங்களுக்கு தொகுதிக்கு ஆளுக்கு 4 பூத் பொறுப்பு கொடுத்தனர். அதில் எங்கள் நிர்வாகிகள் மூலம் சரியாக வேலை பார்த்தோம். அவர்களுக்கு தேவையானவற்றை நாங்களே பார்த்தோம். எனக்கு கொடுத்த 2 பூத்களில் அதிமுக தான் முன்னிலை வகிக்கிறது. கட்சிக்காக எந்த வேலையும் செய்வோம். பத்திரிகைகளில் நாங்கள் எங்கள் பொதுச்செயலாளரை பற்றி பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கட்சி ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால்
நான் அதிமுகவை விட்டு வெளியேற மாட்டேன். நான் அங்கே போகிறேன். இங்கே போகிறேன் என்கிறார்கள். அந்த பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் இருந்தால் ஏதாவது பேசுவார்கள் என்பதற்காக கோவை வந்துவிட்டேன். தொகுதிக்குள் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளோம். கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். கோவையின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசி வருகிறோம்.
அரசுக்கு அதிக கோரிக்கை வைக்கிறோம். நடந்தது நடந்துவிட்டது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது எங்கள் நோக்கமில்லை. அதிமுக செல்வாக்கு குறையவில்லை. எங்கள் வாக்கு தவெகவுக்கு சென்றுள்ளது. 2021 தேர்தலில் அதிமுக ஆட்சி வந்திருக்கும். தினகரன் உள்ளிட்ட பிரிந்து சென்றவர்களை இணைத்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.
விமர்சிக்க தயாராக இல்லை
2026 தேர்தலில் தவெகவுடன் கூட்டணி பேசி வந்த வாய்ப்பை இழந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அவரை பற்றி விமர்சிக்க தயாராக இல்லை. பிரிந்து சென்றவர்கள், வேறு கட்சியில் இணைந்தவர்கள் அனைவரையும் பொதுச்செயலாளர் ஒன்றிணைக்க வேண்டும். அம்மா உயிரை கொடுத்து வளர்த்த கட்சி. எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும். இதை அவர் செய்வார் என்று நம்புகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
