காத்திருக்கும் பொங்கல் பம்பர் பரிசு... அதிமுக -திமுக நிர்வாகிகளிடையே கரைபுரளும் உற்சாகம்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு செய்ய வேண்டியதை இப்போதே செய்து கொடுத்து அனுசரனை காட்டத் தொடங்கியுள்ளார்கள் மாவட்டச் செயலாளர்கள்.
திமுக அதிமுக என இரு பெரும் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் ஒன்றை தயார் செய்து வருகிறார்கள்.
இதனால் மற்ற கட்சிகளை காட்டிலும் அந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த சேர்ந்த கீழ்மட்ட நிர்வாகிகளும் உற்சாகம் பொங்க காணப்படுகின்றனர்.

தமிழர் திருநாள்
வரும் பொங்கல் பண்டிகையானது தேர்தலுக்கு முந்தி வருவதால் ஏராளமான எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் அரசியல் கட்சி நிர்வாகிகள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், வருங்கால எம்.எல்.ஏ.க்கள் என பலரும் போட்டி போட்டு கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களிடம் கரிசணம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது கவனிக்கத் தவறினால் தேர்தல் நேரத்தில் அது எதிரொலிக்கும் என்பதை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மறக்கவில்லை.

டூ விலர்
அதனால் தான் முக்கிய இலாகாவை கொண்டுள்ள தென்மாவட்ட அமைச்சர் ஒருவர், தீபாவளி பண்டிகைக்கே கிளைக்கழக நிர்வாகிகள் தொடங்கி தனது அலுவலக உதவியாளர்கள் வரை ஏகத்துக்கும் உபசரித்து அனுப்பியிருக்கிறார். மேலும், பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் கூடுதலாக செய்வதாக உறுதி வேறு கொடுத்திருக்கிறாராம். அது அண்டா குண்டாவில் தொடங்கி டூ விலர் வரை கூட இருக்கும் எனத் தெரிகிறது.

தாராளம்
அதிமுகவுக்கு சற்றும் சளைக்காத வகையில் திமுகவிலும் நிர்வாகிகளுக்கு கவனிப்பு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த முறை தாராளம் காட்டுவது என முடிவெடுத்திருக்கிறார்கள். காரணம் வேறுவழியில்லை, அதிமுக அமைச்சர்களுக்கு இணையாக தாங்களும் ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறை
இதனிடையே திமுக மற்றும் அதிமுகவில் மட்டுமே நிர்வாகிகளுக்கு இத்தகைய பொங்கல் ஆஃபர்கள் எல்லாம். யாரேனும் தனிப்பட்ட முறையில் செய்தாலின்றி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மற்றக் கட்சிகளில் பெரியளவில் இதனை எதிர்பார்க்க முடியாது.












Click it and Unblock the Notifications