காப்பி அடிச்சிட்டீங்களே! இது கிராபிக்சா? பொன்னியின் செல்வன் vs பாகுபலி! மோதும் தமிழ்-தெலுங்கு பேன்ஸ்
சென்னை: பொன்னியின் செல்வன் பாகம் 1 டீசர் வந்ததில் இருந்து தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் இணையத்தில் ஏற்பட்டுள்ளது. பாகுபலி பெருசா, பிஎஸ் 1 பெருசா என்ற போட்டி இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழன் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர்.
ஏஆர் ரகுமான் இசை அமைப்பில்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. தேசிய அளவில் ஏற்கனவே இதன் டீசர் கவனம் பெற்றுள்ளது.

1000 கோடி ரூபாய்
தென்னிந்திய படங்கள் வரிசையாக பான் இந்தியா அளவில் ஹிட் அடித்துள்ளன. கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பாகுபலி ஆகிய படங்கள் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் வசூலை அடைந்துவிட்டன. அதேபோல் புஷ்பா, விக்ரம் ஆகீஐ படங்கள் ஆயிரம் கோடி ரூபாயை பெறவில்லை என்றாலும் 500 கோடி ரூபாய் வசூலைதாண்டி.. பான் இந்திய ஹிட் படங்கள் ஆகி உள்ளன. இப்படி இருக்க தமிழில் இருந்து முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படமாக பொன்னியின் செல்வன் 1 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோதல்
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இடையே இது மோதலை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 டீசர் வந்ததில் இருந்து தமிழர்கள் - தெலுங்கர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் இணையத்தில் ஏற்பட்டுள்ளது. பாகுபலி பெருசா, பிஎஸ் 1 பெருசா என்ற போட்டி இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்டுள்ளது. யார் பெருசுன்னு அடிச்சு காட்டு என்று கூறி இரண்டு தரப்பும் மோதி வருகின்றன.

கலர் - கிராபிக்ஸ்
தெலுங்கு சினிமா ரசிகர்களோ.. பாகுபலிதான் பெருசு. அது இன்னும் ரிச்சாக இருந்தது. அதன் கலர், டோன் நன்றாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் கலர் நன்றாக இல்லை. டல்லாக இருக்கிறது. அதேபோல் பாகுபலி கிராபிக்ஸ் சிறப்பாக இருந்தது. பொன்னியின் செல்வன் அப்படி இல்லை என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

ஆக்சன்
அதேபோல் பாகுபலி படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்தது. ஆனால் பொன்னியின் செல்வனில் குதிரை வரும் காட்சிகள் பெரிதாக பிரமிப்பை தரவில்லை. ஓகே ரகத்தில் உள்ளது என்று விமர்சனங்களை வைத்துள்ளனர். பிரபாஸ், ராணா போன்று மன்னர்களின் தோற்றம் அவ்வளவு பிரம்மிப்பு அளிப்பதாக இல்லை என்றும் விமர்சனங்களை வைத்து உள்ளனர்.

தமிழ் கதை
இதற்கு தமிழர்களோ.. பாகுபலியில் பெரிதாக கதை இல்லை. ஒரே கதையை இரண்டு பாகமாக எடுத்தனர். ஆனால் பொன்னியின் செல்வன் பல கிளைகள் கொண்ட மிக நீண்ட கதை. அதோடு இது கதை அல்ல.. நிஜத்தில் நடந்தது. பாகுபலி எல்லாம் இதன் அருகில் கூட நிற்க முடியாது. பாகுபலி எப்போதும் வர கூடிய அண்ணன் - தம்பி மோதல் கதை தானே என்று விமர்சித்து உள்ளனர்.

காப்பி அடித்தனர்
அதோடு பாகுபலியில் ஆற்றில் குழந்தை மிதக்கும் காட்சியே பொன்னியின் செல்வன் கதையின் காப்பிதான் . அதோடு யானையில் தேர் கொண்டு வருவது, ஒன்றாக வேட்டை ஆடுவது, சில போர் காட்சிகள் என்று பல விஷயங்கள் பாகுபலி காப்பிதான். அப்படி இருக்கும் போது நீங்கள் பொன்னியின் செல்வனை விமர்சனம் செய்யலாமா? என்றும் கேட்டுள்ளனர்.

ஆக்சன் பொய்
அதோடு கிராபிக்ஸ் காட்சிகளை வெறும் டீஸரை பார்த்து விமர்சனம் செய்ய வேண்டாம். பாகுபலி ஆக்சன் எல்லாம் பொய்யானது. ஆனால் இதில் வரும் ஆக்சன் நிஜத்தில் நடந்தது. அப்போது நிஜத்திற்கு நெருக்கமாகவே படம் எடுக்க முடியும். தெலுங்கு டைப் சண்டை காட்சிகளை வைக்க முடியாது என்று தமிழர்கள் எதிர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எல்லை மீறி மோதல்
மொத்தத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் இது மோதலை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தரப்பு சினிமா ரசிகர்கள் சிலர் விமர்சனம் என்பதை தாண்டி மோசமாக மோதலில் குதித்து உள்ளனர். தமிழர்களை தெலுங்கர்கள் .. இன ரீதியாக விமர்சனம் செய்வதும், தெலுங்கர்களை தமிழர்களும் அதேபோல் விமர்சனம் செய்வதும் இணையத்தில் அதிகரித்துள்ளது. இதற்காக பல பேஸ்புக் பேஜ்கள் தொடங்கப்பட்டு உள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமாவை பார்த்து பாலிவுட் அரண்டு நிற்கும் நிலையில்.. இங்கே நமக்கு உள்ளேயே தேவையின்றி ரசிகர்கள் அடித்துக்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications