Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தக்காளி விலைக்கு வரும் கோபம்.. ரூ. 200க்கு பாப்கார்ன் வாங்கும் போது எங்கே போனது! விக்கிரமராஜா கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை உயர்வு குறித்துக் குறித்து நமது ஒன் இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ள வணிகர் சங்கத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, தக்காளி விலை சற்று உயர்ந்தால் கோபப்படும் நாம், தியேட்டரில் 200 ரூபாய்க்கு பாப்கார்ன் விற்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தக்காளி விலை திடீரென சில நாட்களில் பல மடங்கு அதிகரித்து விட்டது. தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதே இந்த விலை யேற்றத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அதேநேரம் ஒரு தரப்பினர் வியாபாரிகள் தக்காளியைப் பதுக்கி செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா நமது ஒன் இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

தக்காளி விலை: இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "தக்காளி மட்டுமின்றி அனைத்து காய்கறிகளிலும் விலை ஏற்ற இறக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும். சில காலம் அதிகமாக விளைவித்து விடுவார்கள். அப்போது உரிய விலை கிடைக்காமல் பறிக்காமல் விடுவார்கள் அல்லது சாலைகளில் கொட்டி அதிருப்தி தெரிவிப்பார்கள். இதற்கு அரசே தக்காளியை வாங்கி சேமித்து வைப்பது தான் ஒரே தீர்வு.

அரசே ஒரு விலையை நிர்ணயம் செய்து சேமித்து விலை உயரும் சமயத்தில் விற்க வேண்டும். இப்படிச் செய்தால் தக்காளி விலை மிக அதிகமாக உயராது. இதில் இன்னொரு சிக்கலும் ஏற்படும். அதாவது தக்காளி விலை அதிகரிக்கிறது என்ற செய்தியைப் பார்த்து பலரும் தக்காளியை விளைவிப்பார்கள். ஒரே நேரத்தில் பலரும் விளைவிப்பதால் விலை கடுமையாகச் சரியும். அடுத்த முறை யாரும் போட மாட்டார்கள். இதனால் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, இதையெல்லாம் கருதி விவசாயிகளுக்கு உரிய அட்வைஸ் வழங்க வேண்டும்.

நீர் ஆதாரங்கள்: நமது மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்துவிட்டது. நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்து தான் இதுபோல மீண்டும் ஏற்படாது.

பலரும் இப்போது ஏதோ வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாகச் சொல்கிறார்கள். வியாபாரிகள் மீது எளிதாகக் குற்றஞ்சாட்டி விடுகிறார்கள். ஆனால், உண்மை அது இல்லை. இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு ஏற்க வேண்டியது அரசும், ஆட்சியாளர்களும் தான். வியாபாரிகள் இல்லை.

நாங்கள் பார்த்து இல்லை: வெளிநாடுகளில் இருந்து வரும் பருப்புக்கு இறக்குமதியைக் குறைத்துள்ளதால் பருப்பு விலை உயர்ந்துள்ளது. தட்டுப்பாடு காரணமாகச் சீரகம் விலை உயர்ந்துள்ளது. இதுபோன்ற ஒரு விலையேற்றத்தை நாங்களே பார்த்தது இல்லை. 100இல் இருந்து 5, 10 ரூபாய் உயரலாம். இப்படிப் பல மடங்கு உயர்ந்து பார்த்து இல்லை. இதனால் விலைவாசியைக் குறைக்க நாங்களும் வெளியூர்களில் இருக்கும் வியாபாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த விவசாயிகள், வியாபாரிகள், வேளாண் அதிகாரிகள் இணைந்து குழு ஒன்றை அமைக்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காது. மேலும், விவசாயி கடனில்லாமல் வாழ வேண்டும் என்றால் நல்ல விலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளைப் பாதுகாத்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும். விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியைப் போடக் கூடாது. இதுபோன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும். விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தால் பலரும் வேளாண் துறைக்கு வருவார்கள். நல்ல விலை கிடைக்காமல் போவதால் தான் இப்போது பலரும் வேறு வேறு வேலைகளுக்குச் சென்று வருகின்றனர்.

குறைந்துவிட்டது: தஞ்சைக்கு அடுத்து திருவள்ளூரில் தான் நெல் சாகுபடி அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. திருவள்ளூரில் நெல் சாகுபடி கணிசமாகக் குறைந்துவிட்டது. எங்குப் பார்த்தாலும் வீட்டு மனைகள் தான். அரசு தரிசு நிலங்களில் மட்டும் வீடுகளைக் கட்ட அனுமதி தர வேண்டும். இதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

காப்ரேட் நிறுவனங்களுக்கு உதவுவதைப் போலவே அரசு விவசாயிகளுக்கும் உதவ வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல உள்நாட்டு மூலதனம், வணிகம், உற்பத்தியை அதிகரிக்கவும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை அரசு மானிய விலையில் வழங்கலாம். வரி விலக்கை அறிவிக்கலாம். அப்போது தான் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். இதுபோன்ற நடவடிக்கை எடுக்க விவசாயிகள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் இணைத்து குழு அவசியமாகிறது. இதை நாங்கள் அனைத்து அரசுகளிடமும் வலியுறுத்தியே தான் வருகிறோம். ஆனால், யாரும் அமைக்கவில்லை.

 Popcorn is selling at Rs 200 Vikrama Raja response for Tomato price hike

பெரு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது: சில்லறை வர்த்தகத்தில் எந்தவொரு இடத்திலும் ஒரு பெரு நிறுவனம் வந்தால் சுற்றி இருக்கும் பல நூறு சிறு வியாபாரிகள் வேலை இழக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன நடக்கும். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மத்திய மாநில அரசுகளிடம் நாங்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தியே வருகிறோம்..

தக்காளி விலை இனிமேல் ஏறாது. இதற்குப் பிறகு தக்காளி விலை ஒரு மாதத்தில் படிப்படியாகக் குறைந்துவிடும். நாம் தக்காளி வெங்காய விலை அதிகரித்தால் மட்டுமே பேசுகிறோம். வேறு விலை உயர்வு குறித்துப் பேசுகிறோமா.. ஆடை விலை உயர்ந்துள்ளது, டீசல் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது இது குறித்துப் பேசியிருக்கிறோம்.

பாப்கார்ன் ரேட்: ரயில், விமான ரயில் டிக்கெட் உச்சத்தில் இருக்கிறது. அது குறித்து எல்லாம் நாம் பேசுவதே இல்லை. விமான விலை இஷ்டத்திற்கு விற்கிறார்கள். ஆனால், தக்காளி விலை 20, 30 ரூபாய் அதிகரித்தால் அனைவரும் பேசுகிறார்கள். தியேட்டரில் பாப்கார்ன் 200 ரூபாய் கொடுத்துச் சாப்பிடுகிறார்கள். இது எல்லாம் விலையேற்றம் இல்லையா..

 Popcorn is selling at Rs 200 Vikrama Raja response for Tomato price hike

காய்கறி விலையில் ஏற்றம் இறக்கம் எப்போதும் இருக்கும். அரசு இப்போது நஷ்டத்தில் தக்காளியை ரேஷன் கடைகளில் விற்கிறது. என்னைப் பொறுத்தவரை அது தவறானது. அரசு வியாபாரம் செய்யக் கூடாது. வியாபாரிகள் தான் வியாபாரம் செய்ய வேண்டும். அரசு விலையேற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை அதிகரித்து வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பது இயல்பு. விலை ஏறினால் விவசாயிகளுக்குத் தான் லாபம். செயற்கை விலையேற்றம் என்றெல்லாம் இல்லை. இங்கே பதுக்கி வைப்பதற்கான நிதியும் எங்களிடம் இல்லை. இடமும் இல்லை. இதையெல்லாம் பெரு நிறுவனங்களால் தான் செய்ய முடியும். எனவே விலையேற்றத்திற்கு நாங்கள் காரணம் என்பதை உறுதியாகக் கூற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+