சசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையரிடம் அ.ம.மு.க வேட்பாளர் கோரிக்கை
சசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் என்று ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆவின் வைத்தியநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆவின் வைத்தியநாதன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் சசிகலா வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார்.கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு வார ஓய்வுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்பினார். தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறிய சசிகலா தற்போது அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கிறார்.

ஆன்மீக பயணம் சசிகலா
ஆன்மீக பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா போகும் இடங்களில் எல்லாம் அமமுக வேட்பாளர்களை சந்தித்து வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் சசிகலா வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 2017ஆம் சிறை சென்ற பிறகு போயஸ் தோட்ட இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. சசிகலாவின் முகவரி போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் இருந்ததால் அங்கே வாக்காளர்களாக இருந்த சசிகலா, அவரது உறவினர் இளவரசி உட்பட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

சத்யபிரதா சாகுவிடம் புகார்
ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. தற்போது சசிகலாவின் பெயரும் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் ஆவின் வைத்தியநாதன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.

தபால் வாக்கு வழங்கப்படுமா
இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சசிகலாவின் வழக்கறிஞர் இதுகுறித்து இரு வாரங்களுக்கு முன்பாகவே தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் சசிகலாவுக்கு தபால் வாக்கு இந்தத் தேர்தலில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளர்கள் நம்பிக்கை
அரசியலில இருந்து ஒதுங்கி இருக்கும் சசிகலாவுக்கு, தற்போது வாக்களிக்கும் வாய்ப்பும் கிட்டாத சூழல் உருவாகியுள்ளது என ஆதரவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஒரு நாட்டின் குடிமகனின் முக்கிய அடையாளம் வாக்களிக்கும் உரிமை என்பதால் தேர்தல் ஆணையம் இதில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். வாக்களிக்கும் உரிமை சசிகலாவிற்கு கிடைக்குமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications