மீண்டும் மீண்டுமா? சிபிஎம் கூட்டத்தில் சண்முகம் பேசும் போதே பவர் கட்.. மின்வெட்டால் அலறும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன், திருமாவளவன் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூட மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மின் தடை ஏற்பட்டது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ சண்முகம் பேசும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் உடனடியாக பேச்சை நிறுத்தினார். மின் தடையால் கூட்ட அரங்கில் இருள் சூழந்தது.

ஜெனரேட்டர் மூலம் மின்சாரம்
இதையடுத்து, உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 15 நிமிடங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், "கும்மிடிப்பூண்டி 33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் உள்ள 33 கி.வோ. ஏபி சுவிட்ச் கடந்த சனிக்கிழமை முதல் சரியாக செயல்படாததால், 15.09.2026 அன்று காலை 11.00 மணியளவில் பழுதுநீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னதாக, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மாற்றி அளிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கான இடைவெளியில் காலை 10.50 மணி முதல் 11.00 மணி வரை சுமார் பத்து நிமிடம் மட்டுமே கும்மிடிப்பூண்டி பஜாரில் மின் தடை ஏற்பட்டது. மேலும் இந்த பொதுக்கூட்டம் தொடர்பான எந்த ஒரு தகவலும் மின் வாரியத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. பின்னர் 33 கி.வோ. சுவிட்ச் பழுது சரி செய்யப்பட்டு, சுமார் 12.05 மணிக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் மின்வெட்டு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மின் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் வாங்க நடவடிக்கை உள்ளதாகவும் தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக எங்கும் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறிய போதிலும், மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது நிதர்சனமாக உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் இதுபற்றி கூறியதவது:- தமிழ்நாடு மின்சார வாரியம், அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் வாயிலாக சுமார் 7,400 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டு இருந்தாலும் அதில் அளவே உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள மின் தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு மற்றும் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.
மின்வெட்டை மறைக்காமல் நடவடிக்கை எடுங்க
16,194 மெகாவாட் மட்டுமே மின்சாரம் இருக்கும் நிலையில் 21,724 மெகாவாட்டுக்கு மேல் மின்தேவை உள்ளது. தமிழகம் முழுக்க வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மின்நுகர்வும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களே மின்வெட்டு பிரச்சனை நீடிப்பதற்கு கார்ணம்" என்றனர். தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் மின்வெட்டு இருப்பதை மறைக்காமல், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
