லூப்பில் சிக்கியிருக்கும் தவெக அரசு! விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சனை! பெரிய சிக்கல்!
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த மின்வெட்டு பிரச்சனை எதிர் வரும் மழைக்காலத்தில் இன்னும் சீரியஸாக வெடிக்கும் என்றும், அப்போது தவெக அரசு மிகப்பெரிய நெருக்கடியை எதிர்க்கொள்ளும் என்று துறை சார்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திந்த EB கண்ணன் இது குறித்து விரிவாக பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, "மின்சாரத்துறை குறித்து துறை சார்ந்த அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போது அவர் பேசியதற்கும், சட்டமன்ற கூட்டத்தொடரில் எரிசக்தி மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றபோது அவர் பேசியதற்கும் 100% வித்தியாசம் இருக்கிறது.

வெள்ளை அறிக்கையும் உண்மையும்
வெள்ளை அறிக்கை வெளியிடும்போது, பணியாளர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இன்றைக்கு நாங்கள் பகிரங்கமாக சொல்கிறோம்.. மின்தடை ஏற்பட காரணம் ஒரு பக்கம் மின்சார பற்றாக்குறை, மின்சார கொள்முதல், மின் உற்பத்தி எனில்.. மறுபுறம் இதற்கு மிகப்பெரிய காரணம் பணியாளர்கள் பற்றாக்குறைதான். இதை நாங்கள் வெளிப்படையாகவே கூறுகிறோம்.
25 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோம்
பணியாளர்கள் பற்றாக்குறை காரணத்தினால், மின்வெட்டு பிரச்சனை ஏற்படுகிறது என்பதை தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாக மின் ஊழியர் மத்திய அமைப்பு.. நிர்வாகத்திற்கும் அரசுக்கும் தொடர்ச்சியாக கூறிவருகிறது. திமுக அரசு, அதிமுக, இப்போது இருக்கும் தவெக அரசு என.. யாரும் பணியாளர் நியமனத்தில் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து.. அனைத்து பணிகளும் ஒப்பந்த அடிப்படையில்தான் போக வேண்டும் என்கிற நிலைக்கு இவர்கள் வந்துவிட்டார்கள்.
பணி நியமனம்
இதனால்தான் எல்லா பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய தயங்குகிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் இதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னர், பணியாளர்களை தேர்வு செய்வோம் என்று திமுக சொன்னது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர்.. மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி.. ஸ்மார்ட் மீட்டர் வருகிறது என்று சொல்லி பணி நியமனத்தை செய்யாமல் விட்டுவிட்டார்.
வெறும் 4 பேர்தான் வேலை பார்க்கிறார்கள்
அன்றைக்கு அவர் அறிவித்தது.. இன்று வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்லாயிரம் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தற்போது ஓய்வு பெற்று போய்விட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் 11,000 பேர் ஓய்வுப்பெற போகிறார்கள். இதனால் 40 பேர் வேலை பார்க்க வேண்டிய அலுவலகத்தில் வெறும் 4 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். இப்படியான பணியாளர் பற்றாக்குறை காரணமாக மின் பற்றாக்குறை, மின் விநியோக பாதிப்பு மேலும் மேலும் அதிகமாகும்.
தீவிரத்தை ஆட்சியாளர்கள் உணர்வார்கள்
இது வரும் மழைக்காலத்தில் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இது தெரிந்தும் கூட தமிழக அரசும் சரி, மின்சாரத்துறை அமைச்சரும் சரி இதன் மீது உரிய கவனம் செலுத்தவில்லை. சர்வசாதாரணமாக இருக்கிறார்கள். பொதுமக்கள் வீதிக்கு வந்தால்தான் இதன் தீவிரத்தை ஆட்சியாளர்கள் உணர்வார்கள்" என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் மின்வெட்டை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நள்ளிரவில் நிறுத்தப்படும் மின்சாரம்.. அதிகாலை வரை வரவே இல்லை என்றும்.. முதியோர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றன்றனர்.


Click it and Unblock the Notifications
