எட்டப்பனே அவர் தான்.. பாமகவில் எக்குத்தப்பு வேலை பார்த்த ஜிகே மணி? கொந்தளிக்கும் பாட்டாளிகள்! பரபர
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தொடர்ந்து தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை என அன்புமணி கூறியிருந்தார். மோதலுக்கு தான் காரணம் இல்லை என ஜிகே மணி கூறினாலும், தற்போது தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என ஜிகேஎம் நினைப்பதாகவும், அப்படி சேர்ந்தாலும் தான் இணைத்து வைத்தது போல் இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பாமகவினர்.
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. மக்களவைத் தேர்தல் ஆனாலும், சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் பாமகவின் ஆதரவை பெற திமுக, அதிமுக என இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தைலாபுரத்துக்கு தான் செல்வார்கள். அந்த அளவுக்கு கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராமதாஸ்.
ராமதாஸ் வயது முதிர்வு அடைந்த நிலையில் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அன்புமணி ராமதாசை தலைவராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து தலைவராக இருந்த ஜிகே, மணி கௌரவ தலைவராக மாற்றப்பட்டு, கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்டமான முறையில் மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாட்டில் ராமதாஸின் பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கட்சியில் கூட்டணி வேண்டாம் எனவும், அன்புமணி ராமதாஸ் குறித்து அவர் விமர்சித்து பேசியதை பாட்டாளிகள் ரசிக்கவில்லை. ஏற்கனவே நடந்த சில விவகாரங்களிலும் மாநாட்டின் ராமதாஸின் பேச்சுக்கும் காரணம் ஜிகே மணி தான் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ராமதாஸ் வயதை பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள சிலரே அவரை தவறாக வழி நடத்துவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகனுக்கு இடையேயான மோதலுக்கு தான் காரணம் இல்லை எனவும், அப்படி சொன்னால் கத்திய எடுத்துக் கூட என்னை குத்தி விடுங்கள் என பேசி இருந்தார் ஜிகே மணி. இதற்கிடையே ராமதாஸ் அன்புமணி இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அன்புமணி பின்னால் நிற்கும் நிலையில் ஒதுங்கி கொள்வது நல்லது என ராமதாஸ் முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி பாமகவின் எந்தவித மோதலும் இல்லை, விரைவில் அன்புமணியும் ராமதாஸ் சந்திப்பார்கள் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே சமாதான பேச்சு வார்த்தையில் ஜிகே மணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், இன்னும் அவர் குடும்பத்தை பிளவுபடுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். மேலும் அன்புமணி ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேர்ந்தால் கூட அது தன்னால்தான் நடைபெற்றது என காட்டிக்கொள்வதற்காகவே இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே பாமகவில் சில சலசலப்புகள் எழுந்த நிலையில் தர்மபுரியில் பேசிய அன்புமணி எதற்காக என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ஐயா கூறினார் என தெரியவில்லை, மன உளைச்சலால் தூக்கம் என்று தவித்தேன் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் ராமதாஸின் காதுகளுக்கு எட்டியதாக சொல்லப்படும் நிலையில் சுமூகமாக அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்கிறனர். அதே நேரத்தில் நம்மிடம் பேசிய சில பாமக நிர்வாகிகள், ஜிகே மணி இந்த விவகாரத்தில் தேவையில்லாத சில விஷயங்களை செய்து விட்டதாகவும், முழுமையாக அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி இருப்பதை தெரிந்து கொண்டு தற்போது சமாதான முயற்சியில் ஈடுபடுவது போல நடிக்கிறார் என குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications