கேஸ் சிலிண்டர் வேணுமா?.. உஜ்வாலா திட்டத்தில் வரும் அறிவிப்பு.. இலவச சிலிண்டருக்கான மானியம் உயர்கிறதா
சென்னை: கடந்த 1ம்தேதி, கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.. இந்நிலையில், விரைவில் கேஸ் சிலிண்டர் மானியம் உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் பலன்: இந்த திட்டத்தின் கீழ், சிலிண்டர் பெறுவதற்கான வைப்புத் தொகை உட்பட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இதில் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான BPL விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள LPG விற்பனை நிலையம் அல்லது விநியோக மையத்திற்குச் சென்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைக் கேட்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்) பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ் போன்றவை தேவையாக உள்ளன.
தகுதியுடையவர்: விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணாகவும், இந்திய குடிமகளாகவும் இருக்க வேண்டும்.. வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், வீட்டிலுள்ள வேறு யாரும் எல்பிஜி இணைப்பு வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தின் மொத்த மாத வருமானம் யூனியன் பிரதேசம்/மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறக்கூடாது. விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும், விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் 200 ரூபாயை மத்திய அரசு குறைத்தது. உஜ்வாலா திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதலாக, 75 லட்சம் பேரை இந்த திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது.
மானியம் குறைப்பு: அத்துடன், மத்திய அமைச்சரவையில் உஜ்வாலா திட்ட சிலிண்டருக்கான மாநியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தியது.. இதனால், 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.803 ஆக குறைந்தது..
அதாவது, விரைவில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால்தான், இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பரவலான கருத்து எழுந்தது.. அத்துடன், அம்மாநில மக்களின் கவனத்தையும் இந்த அறிவிப்பு ஈர்த்திருந்தது.
விரைவில் அறிவிப்பு: 5 மாநில தேர்தலுக்கே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போகிறது.. எனவே, கேஸ் சிலிண்டருக்கான மானியம், மறுபடியும் உயரவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்த விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications