"யார் கேக்க போறாங்கன்னு இப்படி செஞ்சிட்டாங்க”.. தவெக நிர்வாகியால் கொல்லப்பட்ட இளைஞரின் தாய் கண்ணீர்!
சென்னை: "வசதி இல்லை, பணம் இல்லை, யார் வந்து கேக்க போறாங்கன்னு இப்படி செஞ்சிட்டாங்க" என தையூரில் மகளை காதலித்த பிரவீன் என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகி ஏழுமலை கொலை செய்த நிலையில் பிரவீனின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூர் பகுதியைச் சேர்ந்த தவெக உறுப்பினரான ஏழுமலை என்பவரின் 21 வயது மகள் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தையூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரவீன் என்ற இளைஞரும், ஏழுமலையின் மகளும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழுமலையின் தம்பி மணிகண்டன் என்பவர், பிரவீனை சாலையில் வழிமறித்து பேசியுள்ளார். அப்போது தனது அண்ணன் ஏழுமலையின் மகளை காதலிப்பதை விட்டு விடு என்று கூறியதாகவும், அதற்கு பிரவீன், 'நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். அந்த பெண் என் மீது அதிக பாசமாக இருக்கிறார். என்னால் அவரை விட்டுச்செல்ல முடியாது' என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த மணிகண்டன் அவரது அண்ணன் ஏழுமலை, ஏழுமலையின் மகன் கெளதம் ஆகியோரை செல்போனில் தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு கத்தியுடன் வந்த ஏழுமலை, கெளதம், உள்ளிட்டோர் பிரவீனை முதலில் அடித்து தாக்கியதாகவும், பிறகு கத்தியால் தலை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து கிடந்த பிரவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பிரவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலையான பிரவீனின் தாய் பிரபாவதி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் பிரவீன் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காதல் விவகாரத்தால் பிரவீன் கொலை செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து விசாரணையில் அடிப்படையில் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைத்து பெண்ணின் தந்தை ஏழுமலை, ஏழுமலையின் மகன் கெளதம், ஏழுமலையின் தம்பி மணிகண்டன், கௌதமின் நண்பர் நித்திஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
மருத்துவமனையிலிருந்து பிரவீன் குமார் உடலை இறுதிச்சடங்கு செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்றபோது, அவர் வீட்டிற்கு அருகே உடலை வாங்க மறுத்து பொதுமக்களும், உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கொலையான பிரவீனின் தாய் பிரபாவதி பேசுகையில், "கௌதமின் தங்கையை பிரவீன் 3 வருடங்களாக காதலித்து வந்தான். கௌதமின் அப்பா ஏழுமலை எனக்கு போன் செய்து மிரட்டுவார். உன் பையனுக்கு தலை இருக்காது என மிரட்டுவார்.
எங்களுக்கு யாரும் இல்லை.. அப்பா இல்லாமல் 4 பிள்ளைகளையும் வளர்த்தேன். வசதி இல்லை, பணம் இல்லை, யார் வந்து கேக்க போறாங்கன்னு இப்படி செஞ்சிட்டாங்க.. இப்போதான் என் புள்ளை வேலைக்கு போனான்.. இந்த நேரத்தில் அவனை கொன்னு போட்டுட்டாங்க. என் புள்ளையைத்தான் நம்பி இருந்தோம். மிரட்டிக்கொண்டே இருந்தவர்கள் என் மகனை கொன்றுவிட்டார்கள்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
