விஜயகாந்த் நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. வீடியோவில் பிரேமலதா விளக்கம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என மனைவியும் கட்சி பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நலம் குறித்து வதந்திகள் கிளம்பின.

இதையடுத்து தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர். வெளியூர்களில் உள்ளவர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் இருந்த இடத்திலிருந்தே விஜயகாந்தின் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அது போல் விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைய அரசியல் தலைவர்களும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
விஜயகாந்துக்கு இருமல் தீவிரமானதால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தேமுதிக சொந்தங்களுக்கும் கேப்டன் மீது பற்று வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் பனிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அறிக்கை வழக்கமான அறிக்கைதானே தவிர அதில் பதற்றப்படுவதற்கோ பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை.
கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் குழு, செவிலியர்கள், நான் உள்பட அனைவரும் சிறந்த முறையில் பார்த்துக் கொள்கிறோம். வெகு விரைவில் கேப்டன் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் நிச்சயம் சந்திப்பார் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தனைபேரின் பிரார்த்தனைகளும் அவர் செய்த தருமங்களும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைக்கோடி தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் நான் கேட்டுக் கொள்வது யாரும் பயப்பட வேண்டாம். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அது எப்போது என்பதை நான் தெரிவிக்கிறேன். அதுவரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications