சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்.. விவரம்
சென்னை: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அஹமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தவிர சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆா்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு நீதிபதி விக்டோரியா கெளரி உள்பட 5 பேரை நிரந்தர நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரைக்கு தமிழக ஆளுநரும், தமிழக முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனா்.

இந்நிலையில் சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகளான நீதிபதி விக்டோரியா கெளரி, நீதிபதி ஶ்ரீ பிள்ளைப்பாக்கம் பகுக்குட்டும்பி பாலாஜி, நீதிபதி ஶ்ரீ கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதிபதி ராமச்சந்திர கலைமதி, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகவும் நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அதே அறிவிப்பில், 'அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அஹமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் விரைவில் அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சமீம் அஹமத் நியமனம் மற்றும் நிரந்தர நீதிபதிகள் உயர்வு ஆகியவற்றை சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். அதற்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீதம் காலியாக உள்ள 12 நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications
