செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி.. அண்ணன் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்.. ஆளுநர் தமிழிசை!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் பதாகைகளில் நாட்டின் அடையாளமான பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடி புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. அண்மையில் கோவையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்ட விழாவில், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டி வருகின்றனர். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இதில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினரும் வருகிறார்கள்.
ஆனால் செஸ் ஒலிம்பியாட் பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் பல இடங்களில் இல்லை. இதனை மரியாதைக்குரிய முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் கவனிக்க வேண்டும். செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கப் போகிறது.
செஸ் ஒலிம்பியாட் அழைப்பிதழில் எப்படி இருக்கிறதோ, அப்படியே அனைத்து இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும். இதனை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications