பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பெரிய பிளான்.. ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமனுக்கு பறக்கிறார்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நான்கு நாள் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளார் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் (டிசம்பர் 15 - 16)
பிரதமர் மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பின் பேரில் டிசம்பர் 15 முதல் 16 வரை ஹஷிமைட் ஜோர்டான் இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் ஹுசைனைச் சந்தித்து, இந்தியாவுக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவுகள் முழுவதையும் ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து, பரஸ்வரம் இருவரும் விவாதிக்க உள்ளார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை குறிக்கும் இந்தப் பயணம் இருக்க போகிறது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்புக்காகப் புதிய ஒத்துழைப்பு வழிகளை ஆராயவும், பிராந்திய அமைதி, செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எத்தியோப்பியா (டிசம்பர் 16 - 17)
இந்தப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலியின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி டிசம்பர் 16 முதல் 17 வரை எத்தியோப்பியா குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது தான்.
இந்தியா - எத்தியோப்பியா இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர் அலியுடன் விரிவான விவாதங்களை நடத்த உள்ளார் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய நட்பு உறவுகளையும், இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் (டிசம்பர் 17 - 18)
பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு பயணத்தின் இறுதிக் கட்டமாக, சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில் டிசம்பர் 17 முதல் 18 வரை ஓமன் சுல்தானகத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். இது பிரதமர் மோடி ஓமனுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். இந்தியா மற்றும் ஓமன் பல நூற்றாண்டுகள் பழமையான நட்பு, வர்த்தகத் தொடர்புகள் உள்ளன. இந்தியர்கள் பலர் ஓமனில் வேலை செய்து வருகிறார்கள். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 70 ஆண்டுகளைக் குறிக்கும் விதமாக நடக்கிறது. ஓமன் சுல்தான் 2023ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications