இன்று நள்ளிரவு முதல் அறிவிக்கப்பட்ட ஸ்ட்ரைக் வாபஸ்.. தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசு வெற்றி பயணத்திட்டத்தில் தனியார் பேருந்துகளை இணைத்து அதற்கு மானியம் வழங்க கோரி இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் செயல்பாட்டுக்கு வந்தது. தவெக தேர்தல் வாக்குறுதியில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.

அந்தன்படி தவெக ஆட்சி அமைத்ததையடுத்து முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெற்றிப் பயணம் திட்டத்தை அறிவித்தார். அதன்படி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
வெற்றிப் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தனியர் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். வெற்றிப் பயணம் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், அதற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி போராட்டம் அறிவித்தது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 30 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. இதனால் தனியார் பேருந்துகளை தினசரி போக்குவரத்துக்காக நம்பியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டது
முன்னதாக சென்னையில் அக்கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் 69 சதவீத பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 'வெற்றிப் பயணம்' எனப் பெயரிடப்பட்டு, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். வெற்றி பயணம் திட்டத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படுவதால், தனியார் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.
இதனால் தனியார் பேருந்து துறையைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படுவதைப் போல, தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
அதற்கான கட்டணத்தை அரசு மானியமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், செப்.29 ஆம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி (நாளை) நள்ளிரவு 12 மணி வரை தனியார் பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை ஒருநாள் அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக, வருவாய் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் உறுதி அளித்ததை அடுத்து வழக்கம்போல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
