ஓடிடி படங்களுக்கு செக்.. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அமைச்சரிடம் வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை: தியேட்டர்களை விட இன்று ஓடிடியில் அதிக படங்கள் வெளியாகி ஹிட் ஆகிவரும் நிலையில், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சாரை கடுமையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவாவில் 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதுதொடர்பான தென்னிந்திய திரையுலக கலைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளின் திரைத் துறையினர் கலந்துகொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு 55 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலக அளவிலும், இந்திய அளவிலும் திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். இந்த விழா திரைத் துறையை சேர்ந்த கலைஞர்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்ள உதவும். அதே நேரத்தில் திரைப்படங்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தவும் உதவும்.
இந்திய சினிமா துறை வளர்ச்சியடைந்த துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, அதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் பொழுது போக்குக்கான வேல்ஸ் உச்சி மாநாடு பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தொலைக்காட்சி, ஓடிடி, டிஜிட்டல், சினிமா, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற அனைத்து துறை சார்ந்த நபர்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கான சென்சாரை கடுமையாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்தப் படமானாலும் சுதந்திரமாக படத்தை இயக்கலாம். ஆனால், அதற்காக நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சென்சார் கடுமையாக்குவது குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 'அமரன்’ போன்ற நாட்டுப் பற்றுள்ள படங்களை வரவேற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications