ரிவ்யூ என்ற பெயரில் வரம்பு மீறினால் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை.. தயாரிப்பாளர் சங்கம் முடிவு!
சென்னை: திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கச் செல்லும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடிக்கும்போதே ஓடிடி தளங்களுக்கான வெப் சீரிஸ்களில் நடித்தால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, இனி ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கிட்டு (Share Basic) முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. லாபத்தின் அடிப்படையில் வரும் பணத்தை நடிகர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். லாபம் கிடைத்தால் அது நடிகருக்கும் பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவை உள்பட மொத்தம் 23 தீர்மானங்கள் தயாரிப்பாளர்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications