சொத்து வாங்குவோரே உஷார்.. கிரயப் பத்திரம், விடுதலைப் பத்திரம், பாகப்பிரிவினை சிக்கல்கள் என்ன?
சென்னை: நிலம் அல்லது வீடு வாங்கும்போது கிரையப் பத்திரம் முக்கியம். குடும்பச் சொத்தில் ஒருவருடைய பங்கை மற்றொருவர் பெறும்போது விடுதலை பத்திரம் தேவைப்படலாம். அதேபோல், குடும்பத்தினர் தங்களுக்குள் சொத்தை பிரித்துக் கொள்ளும்போது பாகப்பிரிவினை பத்திரம் பயன்படுகிறது. இந்த 3 பத்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்? எப்போது எந்த பத்திரத்தை பயன்படுத்த வேண்டும்?
சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்வதில் தமிழக பதிவுத்துறை இப்போது சில புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பொதுமக்களே ஆன்லைனில் பத்திரங்களைத் தயாரிக்கும் வசதியும், குடும்ப சொத்து தொடர்பான சில பத்திரங்களுக்கு காகிதமில்லா பதிவுமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கிரையப் பத்திரம் என்றால் என்ன
ஒருவர் தனக்கு சொந்தமான நிலம் அல்லது வீட்டை இன்னொருவருக்கு விற்பனை செய்யும்போது அதற்காக எழுதப்படும் ஆவணம்தான் கிரையப் பத்திரம். இதில் விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் விவரங்கள், சொத்தின் அளவு, முகவரி, சர்வே எண், விற்பனைத் தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
சொத்தின் உரிமையை விற்பவரிடமிருந்து வாங்குபவருக்கு மாற்றுவதில் இந்த பத்திரம் முக்கியமானது. நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள் பத்திரத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்து, உரிய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
விடுதலை பத்திரம் எதற்காக?
குடும்ப சொத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உரிமை இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில், ஒருவர் தனக்குள்ள பங்கை மற்றொரு உரிமையாளருக்கு விட்டுக்கொடுக்கும்போது விடுதலை பத்திரம் எழுதப்படுகிறது.
உதாரணமாக, அப்பாவின் சொத்தில் 2 மகன்களுக்கும் உரிமை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மகன் தனது பங்கை மற்றொரு மகனுக்கு விட்டுக்கொடுக்க விரும்பினால், அதற்கான சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப விடுதலை பத்திரம் பதிவு செய்யலாம்.
இதன் மூலம் சொத்தில் யாருடைய உரிமை தொடர்கிறது, யார் தங்களுடைய பங்கை விட்டுக்கொடுக்கிறார்கள் என்பது ஆவணமாகிறது. ஆனால், பத்திரம் எழுதுவதற்கு முன்பு சொத்தின் உரிமை மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்குகளை சரிபார்ப்பது அவசியம்.
பாகப்பிரிவினை பத்திரம்
ஒரு குடும்பத்துக்கு சொந்தமான நிலம் அல்லது வீடு பலருடைய பெயரில் இருக்கும்போது, அவரவர் பங்குகளை தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள பாகப்பிரிவினை பத்திரம் பயன்படுகிறது.
உதாரணமாக, 2 சகோதரர்களுக்கு கூட்டாக சொந்தமான நிலத்தை இருவரும் தனித்தனியாக பிரித்து கொள்ள விரும்பினால், எந்த பகுதியில் யாருக்கு உரிமை என்பது பத்திரத்தில் குறிப்பிடப்படும்.
இதனால் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும் சொத்தின் அளவு, எல்லைகள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சொத்துப் பிரிப்பு தொடர்பான குழப்பங்களை தவிர்க்கவும் இந்த பத்திரம் உதவுகிறது.
புதிய ஆன்லைன் வசதி
இந்த 3 பத்திரங்களையும் தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக பதிவுத்துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. STAR 3.0 திட்டத்தின் கீழ் TNREGINET வெப்சைட்டில் பொதுமக்களே பத்திரங்களைத் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆவண எழுத்தர்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை மாற்றுவது இதன் முக்கிய நோக்கமாகும்.
அந்தவகையில், TNREGINET வெப்சைட்டில் உள்ளே நுழைந்து "Create Document" என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும். அதில் கிரையப் பத்திரம், அடமானப் பத்திரம், குத்தகைப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், பரிமாற்றப் பத்திரம், ரத்து பத்திரம், திருத்தப் பத்திரம் உள்ளிட்ட ஆவண வகைகளை தேர்வு செய்யலாம்.
அதன்பிறகு சொத்தை வாங்குபவர், விற்பவர், சொத்தின் சர்வே எண், எல்லைகள், சாட்சிகள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் இணையதளமே பத்திரத்தின் வரைவை தயாரிக்கும். அதைச் சரிபார்த்து PDF வடிவில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.. முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவற்றையும்கூட ஆன்லைனிலேயே செலுத்தலாம்...!!


Click it and Unblock the Notifications
