பத்திரப்பதிவில் இனி புது ரூல்ஸ்.. மொத்தமாகவே ஈஸியாக மாறுது.. தமிழக அரசின் அடுத்த பிளான் என்ன?
சென்னை: ஒரு வீட்டை வாங்கினாலும் சரி, நிலத்தை விற்றாலும் சரி.. பத்திரப்பதிவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அலுவலகம், ஆவணங்கள், கையெழுத்து என நீளும் நடைமுறைதான். இந்த வேலையை முடிக்கும்போது ஆவணங்களை தயார் செய்வது முதல் அவற்றை சரிபார்ப்பது வரை பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பத்திரப்பதிவு முறையையே இன்னும் எளிமையாக்க தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை பற்றி பார்ப்போம்.!!
தற்போது பத்திரப்பதிவு உள்ளிட்ட பல சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், நடைமுறையில் காகித ஆவணங்களின் பயன்பாடு இன்னும் இருக்கிறது. ஒரு பத்திரத்தை தயார் செய்வது, அதில் உள்ள தகவல்களை சரிபார்ப்பது, அதை பதிவு செய்வது என ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களை கையாள வேண்டிய நிலை உள்ளது.

பத்திரப்பதிவு முறை
இதில் பொதுமக்களுக்கு இருக்கும் சிரமம் என்ன? ஒரு முக்கியமான சொத்து ஆவணம் என்பதால் அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தொலைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த பத்திரம் தேவைப்பட்டாலும் மறுபடியும் எடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கும். வீட்டை வாங்கியவர் மட்டுமல்ல.. அதை அடுத்து விற்கும்போதும், வாரிசு தொடர்பான பிரச்சினை வரும்போதும் அந்த ஆவணங்கள் முக்கியமாகின்றன.
அதனால்தான் பத்திரப்பதிவு நடைமுறையை அடுத்தகட்டமாக டிஜிட்டல் முறைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் காகிதமில்லாத மின்னணு ஆவணப் பதிவு முறையாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது.
காகிதமில்லா முறையின் பயன்கள்
அப்படி காகிதமில்லா முறைக்கு மாறினால் பொதுமக்களுக்கு என்ன பயன்? பத்திரப்பதிவு தொடர்பான தகவல்களை மின்னணு முறையில் கையாள முடியும். காகித ஆவணங்களை மட்டும் நம்பியிருக்க வேண்டிய நிலை குறையும். முக்கியமான தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதும், தேவைப்படும் நேரத்தில் அதை அணுகுவதும் எளிதாகும்.
அதேபோல், அலுவலகத்தில் நடைபெறும் வேலைகளிலும் டெக்னாலஜியை அதிகமாக பயன்படுத்த முடியும். இதனால் தேவையில்லாத காகித வேலைகள் குறையலாம். ஆவணங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது போன்ற பணிகளும் குறையலாம். பொதுமக்கள் ஒரு பத்திரத்தை பதிவு செய்வதற்காக தேவையில்லாமல் பல கட்டங்களில் அலைய வேண்டிய நிலையும் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
இதற்காக மாதிரி பத்திரப்பதிவு மையம் அமைக்கும் திட்டத்தையும் அரசு விரைவில் தொடங்க உள்ளது. புதிய முறையில் பத்திரப்பதிவு சேவைகள் எப்படி இருக்கும் என்பதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான முன்னோடி மையமாக இது அமையும்.
இந்த அறிவிப்பை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பத்திரப்பதிவுத்துறையை முன்னேற்றுவதற்கு தமிழக முதல்வர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். விதிகளை மீறி தவறு செய்பவர்கள் மீது போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் பத்திரப்பதிவு மற்றும் பிற ஆவணப் பதிவு சேவைகள் மேலும் எளிமையாக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும்.
ஆன்லைன் மற்றும் மின்னணு முறை
வரப்போகும் புது வருட துவக்கத்திற்குள் பத்திரப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் காகிதமில்லா மின்னணு ஆவணப் பதிவு முறையாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. அதேபோல், மாதிரி பத்திரப்பதிவு மையம் அமைப்பதற்கான புதிய திட்டமும் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.
அதாவது, பத்திரப்பதிவு என்றாலே கையில் ஒரு கட்டு ஆவணங்களுடன் அலுவலகம் செல்வது என்ற பழைய நடைமுறையில் இருந்து, இன்னும் அதிகமான பணிகளை ஆன்லைன் மற்றும் மின்னணு முறையில் செய்யும் அடுத்தகட்டத்தை நோக்கி பதிவுத்துறை நகர உள்ளது. இது மட்டும் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பத்திரப்பதிவு வேலை பொதுமக்களுக்கு எவ்வளவு எளிதாகப் போகிறது என்பதுதான் அடுத்ததாக கவனிக்க வேண்டிய விஷயம்.


Click it and Unblock the Notifications
