உடனே முடியுங்க.. பழைய சொத்து வரியை செலுத்திட்டீங்களா? இல்லாட்டி அவ்ளோதான்.. சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.1260 கோடி சொத்து வரி வசூலாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதைவிட முக்கியமாக, முக்கிய நபர்கள் மீது ஜப்தி நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்து வரியாகும்... கிட்டத்தட்ட 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.. இதன் வருவாய் மூலம், மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர்.
சொத்துவரி: அவர்களிடமிருந்து அரையாண்டுக்கு ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ-1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.. குறிப்பாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரையாண்டு: அப்படித்தான், அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்களாம்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் சொல்லும்போது, 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். இதுவரை ரூ.1,260 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.350 கோடி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1500 கோடி சொத்துவரி வசூலானது. இந்த முறை இதைவிட கூடுதலாக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி: சொத்து உரிமையாளர்களுக்கு மெசேஜ் மூலம் நினைவுப்படுத்தி வருகிறோம். பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பும் அவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சொத்துவரி செலுத்துவதற்காக, விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம், முக்கிய இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்போகிறோம்
சொத்து வரி செலுத்த தவறினால், அபராதமாக மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். இதுக்கு முன்புவரை, எந்த சொத்துக்கு வரி கட்டவில்லையோ, அந்த சொத்தை மட்டும்தான் ஜப்தி செய்ய முடியும். ஆனால், இப்போது அப்படியில்லை.. புதிய சட்ட விதிகளின்படி, இனி சொத்து உரிமையாளரின், எந்த சொத்தை வேண்டுமானாலும் ஜப்தி செய்ய முடியும்.
வரி நிலுவை: அந்தவகையில், நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துகள் விரைவில் ஜப்தி செய்யப்பட உள்ளன. நீண்ட காலம் வரி செலுத்த தவறியவர்களுக்கு சென்னை மாநகராட்சி சலுகை வழங்க தயாராக உள்ளது. ஆனால் பெரிய நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முறையிடுவதால் காலதாமதம் ஆகிறது. இதனால் மாநகராட்சிக்கு வரிகள் குறைவாக சேர்வதால் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது
சென்னையில் 10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் லிஸ்ட் தயாராகி கொண்டிருக்கிறது. முனிசிபல் சட்டத்தின்படி இவர்களிடம் ஜப்தி செய்யவும் முடிவாகி உள்ளது" என்றனர்.
எப்படி வரி செலுத்துவது: வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம்.
அல்லது "நம்ம சென்னை", பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள க்யூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம்.












Click it and Unblock the Notifications