சென்னையில் சொத்துவரி 3 மடங்கு உயர்வு? மாநகராட்சி பக்கத்தில் ஆதாரங்களை பதிவிட்டு குமுறும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்கு சொத்துவரி அதிகம் வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில், தவறான கணக்கீடு அல்லது குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தான் திருத்தப்பட்ட சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளன என்றார். ஆனால் மக்களில் பலர், சென்னை மாநகராட்சி பக்கத்தில் சொத்துவரி எந்த அளவிற்கு தங்களுக்கு அதிகமாக வந்துள்ளது என்பதை சுட்டிக்காடடி வருகிறார்கள். அதுபற்றி விரிவாக பார்ப்போம்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயின் ஒரு முக்கிய ஆதாரமாக சொத்துவரி உள்ளது. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுய அளவீடு நடவடிக்கையின்போது, சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துகளின் பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பு குறித்த விவரங்களை வழங்கியதன் அடிப்படையில் சொத்துவரி மதிப்பீட்டில் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக மறுமதிப்பீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டன.

Property tax has increased in Chennai residents have posted evidence on the Corporation s page

சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுமதிப்பீடு, புவிசார் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், சொத்துவரி மதிப்பீடானது சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துகளிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை கமிஷனரிடம் தங்களது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். அதை சென்னை மாநகராட்சி பரிசீலனை செய்து, ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்" என்று கூறியிருந்தார்,

இதனிடையே சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பலருக்கும் சொத்துவரி அதிகமாக வந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் எழுந்தன. பலரும் சொத்துவரி வழக்கத்தைவிட 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதாக சுட்டிக்காட்டி கருத்துக்களை பதிவிட்டபடி இருந்தார்கள். இதுபற்றி ஊடகங்களில் செய்திகளும் அடுத்தடுத்து வெளியாகின.

இதையத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ். மாநகராட்சியின் சமூக வலைதளப்பக்கத்தில் கூறுகையில், "அன்பார்ந்த சென்னைவாசிகளே, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.

பெருநகர சென்னை மாநகராட்சியில், தவறான கணக்கீடு அல்லது குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத்தான் திருத்தப்பட்ட சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரப்பளவு வேறுபாடுகள் புவியியல் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் தரவு, பிற அரசுத் தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய பிரகடனம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருப்பவர்கள், குறிப்பாணை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் வதந்திகளையும், தவறான செய்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு கூறியிருந்தார்.

ஆனால் மக்களே அந்த பதிவிற்கு கீழ் அடுத்தடுத்து சொத்து வரி அதிகமாக வந்துள்ளதை சுட்டிக்காட்டியபடி இருந்தார்கள். அவர்களில் சிலரது பதிவினை பார்ப்போம். ஸ்ரீராம் என்பவர் வெளியிட்ட பதிவில் "முந்தைய தொகையிலிருந்து இது 100% உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2022-23 ஆம் ஆண்டில் தான் வரி உயர்த்தித் திருத்தப்பட்டது; அதற்குள் மீண்டும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளில் எந்த மாற்றமும் செய்யாமல், எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்தே அமலுக்கு வரும் வகையில் இப்படி வரியைத் திருத்தியிருப்பது மிகவும் மோசமான செயல்" என்று கூறியுள்ளார்.

இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "உங்களின் இந்தத் திடீர் வரி உயர்வு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஏற்கனவே அரசு அதிகாரியால் நேரில் அளவீடு செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்திற்கு, இரண்டே ஆண்டுகளில் 250% வரி உயர்வு (அரை ஆண்டுக்கு ₹4,480-லிருந்து ₹11,330 வரை) விதிக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

Property tax has increased in Chennai residents have posted evidence on the Corporation s page

மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில் "நான் உங்களுக்குத் தனியாக மெசேஜ் அனுப்பியுள்ளேன். ஒரே தெருவிலோ அல்லது ஒரே அடுக்குமாடி குடியிருப்பிலோ உள்ள அனைத்து வீடுகளுக்கும் இப்படி வரி உயர்த்தப்படவில்லை. நான் மட்டும் தான் தவறாகக் குறிவைக்கப்பட்டுள்ளேன் " என்று கூறியுள்ளார்.

நான்காவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "புகார்களை அல்லது ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஏதேனும் ஆன்லைன் இணையதளம் அல்லது வசதியை நீங்கள் உருவாக்கியுள்ளீர்களா? அல்லது குடிமக்கள் அனைவரும் உங்கள் அலுவலகங்களுக்கு நேரில் வந்து வரிசையில் நிற்க வேண்டுமா? உங்களால் ஆன்லைனில் வரியைச் சேகரிக்க முடிகிறது என்றால், வரிக்கான புகார்களையும் ஆன்லைனிலேயே தீர்ப்பதற்கான வசதியை நீங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்." என்று கூறியுள்ளார்.

Property tax has increased in Chennai residents have posted evidence on the Corporation s page

சுகிர்ராஜ் என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "எனக்கு 06.08.2026 அன்று திருத்தப்பட்ட புதிய நோட்டீஸ் வந்துள்ளது. நாங்கள்தான் ஏற்கனவே ஏப்ரல் மாதத்திலேயே முன்பணத்தை செலுத்திவிட்டோமே! அரசு அளித்த தள்ளுபடி தொகையும் அதில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது எல்லா கணக்கீடுகளையும் மீண்டும் திருத்தி, நாங்கள் செலுத்திய பணத்தையும் மாற்றி சரிசெய்துள்ளார்கள். இப்போது முதல் காலாண்டிற்கு புதிதாக ரசீது கொடுத்துள்ளார்கள். நாங்கள் தான் ஏப்ரலிலேயே செலுத்திவிட்டோமே, அப்புறம் எதுக்கு மீண்டும் முதல் காலாண்டிற்கு ரசீது தருகிறார்கள்?" இவ்வாறு கூறியுள்ளார்.

ரவி என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "இதுதான் நிஜமான நிலைமை. என்னுடைய விஷயத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 100%-க்கும் அதிகமாக வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சொத்து வரியில் ஒரு மிகப்பெரிய உயர்வு (60%-க்கும் மேல்) செய்யப்பட்டுள்ளது. சாலைகள் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளிலும் எந்தவொரு கண்கூடான முன்னேற்றத்தையும் செய்து தராமல், உங்களால் எப்படி ஒவ்வொரு வருடமும் இப்படிச் சொத்து வரியை மீண்டும் மீண்டும் உயர்த்த முடியும்?" இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

சுப்பிரமணி என்பவர் மாநகராட்சியை டேக் செய்து வெளியிட்ட பதிவில் கூறுகையில், "ஐயா, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஒரு 'கேட்டட் கம்யூனிட்டி' குடியிருப்பில் எனது வீடு உள்ளது. நான் சொத்து வரி மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த போது, எனக்கு ஆண்டுக்கு ₹26,000 வரி விதிக்கப்பட்டது. ஆனால், எனக்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஆண்டுக்கு ₹4,000 மட்டுமே வரியாகச் செலுத்துகிறார். இந்த மிகப்பெரிய வேறுபாடு குறித்து நான் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், 'இது கணினி மூலம் தானாக உருவாக்கப்பட்டது ' என்று மட்டுமே சாக்குப்போக்கு கூறுகிறார்கள்." இவ்வாறு கோபமாக கூறியுள்ளார்.

Property tax has increased in Chennai residents have posted evidence on the Corporation s page

சாசா என்பவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "நான் ஏற்கனவே 2026-27 நிதியாண்டின் முதல் அரை ஆண்டிற்F வரியைச் செலுத்திவிட்டேன். ஆனால் இப்போது கடந்த இரண்டு அரை ஆண்டுகளுக்கான கட்டணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக 51% உயர்த்தியுள்ளனர்.

இதற்கு என்ன நியாயம்/காரணம்? இதற்கான கணக்கீடு எங்கே? முன் அறிவிப்பு எங்கே? இப்படி ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முன்னால் பொதுமக்களுக்கு ஏன் விரிவான தகவல் தொடர்பு செய்யப்படவில்லை? தவறுதலாக அல்லது குறைத்து மதிப்பீடு செய்தது யார்? - நிச்சயமாக சொத்து உரிமையாளர்கள் கிடையாது!" இவ்வாறு கோபமாக கூறியுள்ளார்.

இதனிடையே அனைவருக்குமே பதில் அளித்துள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், தனிமெசேஜ் ஆக அனுப்புமாறு கூறியுள்ளனர். அதிகமாக வந்துள்ளதாக கூறப்படும் சொத்துவரி தொடர்பாக விரிவான ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனித்தனியாக கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+