ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்கல.. நிரூபித்துக் காட்டுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு மரகதம் குமரவேல் சவால்
சென்னை: ஓட்டுக்கு ஒத்த ரூபா கூட தான் கொடுக்கவில்லை, நிரூபித்துக் காட்டுங்கள் என்றும், தவகெவின் கொள்கையே ஊழலற்ற ஆட்சி, தூய்மையான ஆட்சி என்று இருக்கும்போது எப்படி பணம் கொடுப்பார்கள் என்று மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது. வாக்குப் பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் போட்டியிட்டுள்ளார்.

ஊழலற்ற ஆட்சி
மதுராந்தகம் தொகுதியில் தீவிரமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தவெகவின் ஓட்டுக்கு பரிசுப் பொருள்கள், டோக்கன் மற்றும் பணம் கொடுத்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில, ஓட்டுக்கு ஒத்த ரூபா கூட தான் கொடுக்கவில்லை, நிரூபித்துக் காட்டுங்கள் என்றும், தவகெவின் கொள்கையே ஊழலற்ற ஆட்சி, தூய்மையான ஆட்சி என்று இருக்கும்போது எப்படி பணம் கொடுப்பார்கள் என்று மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எதற்காக பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன் என்பது குறித்து ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தலைமை எடுத்த முடிவு காரணமாகவும், கொள்கைக்கு மாறான முரண்பாடு காரணமாகத்தான் நான் வெளியில் வந்தேன். தவெகவில் குதிரை பாரம் எதுவும் நடைபெறவில்லை.
குதிரை பேர கட்டுக்கதை
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை ஓட்டுக்கே பணம் கொடுக்காமல் பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 108 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் கடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தனர். இதேபோல பல தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
தவெகவின் கொள்கையே ஊழலற்ற ஆட்சி, தூய்மையான ஆட்சி கொண்டே வரவேண்டும் என்பது தான். அப்படி இருக்கையில் குதிரை பேரம் எப்படி நடந்திருக்கும். குதிரை பேரம் என்கிற வெறும் கட்டுக்கதையை எதிர்க்கட்சியினர் செய்து கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் யாரும் தவெகவை விமர்சிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் காழ்ப்புணர்ச்சி காரணமாக குதிரை பேரம் என்பதை திணிக்கின்றனர்.
ஒத்த ரூபா கொடுக்கல
மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நிச்சயமாக 100 சதவீதம் தவெகவுக்கு வாக்களிப்பார்கள். மதுராந்தகத்தில் ஓட்டுக்காக ஒத்த ரூபாயை கூட நான் கொடுக்கவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
