அயன் பாணியில் போதைப் பொருள் கடத்தல்! சிங்கம் பாணியில் தட்டித் தூக்கிய ஆபிசர்ஸ்! சென்னையிலா இப்படி?
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பிடிபட்ட நிலையில், தற்போது சென்னை துறைமுகத்தில் சூடோ எபிட்ரின் போதைப் பொருட்கள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 110 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்ட நிலையில், திமுக பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து அங்கிருந்து தூத்துக்குடி, இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தகவல் கிடைத்த நிலையில், இந்த மூன்று பகுதிகளிலும், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், தமிழக போலீசார், கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படவிருந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல் கடந்த மாதம், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் சுமார் 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ 130 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்தை மையமாக வைத்து போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதோடு, இளைஞர்களிடையே பழக்கமும் அதிகரித்துள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக கடத்த முயன்ற சூடோ எபிட்ரின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக சரக்கு கப்பல் ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்தக் கப்பலில் பெரிய அளவிலான போதைப் பொருட்கள் மறைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து விரைந்து சென்ற தனிப்படை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் துறைமுகத்தில் புறப்பட தயாராக இருந்த சரக்கு கப்பலை நிறுத்தியதோடு அதில் தீவிர சோதனை நடத்தினர். கப்பலில் சுமார் 450க்கும் மேற்பட்ட மூட்டைகள் இருந்தது. அதில் ஆய்வகங்கள், தொலைத் தொடர்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் குவார்ட்ஸ் பவுடர் ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மூட்டையையும் அதிகாரிகள் தனித்தனியாக பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது 37 மூட்டைகளின் அடிப்பகுதியில் தலா மூன்று கிலோ எடை கொண்ட 37 சூடோ எபிட்ரின் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை அடுத்து மொத்தமாக அனைத்து போதை பொருட்களையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 112 கிலோ என கூறப்படுகிறது. இதன் சர்வதேச மதிப்பு 120 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்ததோடு சொகுசு கார்கள் மற்றும் நான்கு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 300 கோடிக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications