360 டிகிரி.. "ஆடு".. வீடியோவை பகிர்ந்து கேள்வி கேட்டவருக்கு! ஆங்கில "கிளாஸ்" எடுத்த பிடிஆர்! கிண்டல்
சென்னை: தனது வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்த சுமந்த் ராமன் என்பவருக்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இலவச திட்டங்கள் குறித்து வடஇந்திய ஊடகங்களில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றது. அதில் இருந்தே பிடிஆர் பேசிய வீடியோக்கள் பல இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவரின் வீடியோக்களை வடஇந்தியர்கள் கூட பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பிடிஆர், எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லாம்.
நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

விமர்சனம்
இந்த நிலையில் மற்றொரு வடஇந்திய தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிடிஆர், எங்கள் மீது விமர்சனம் வைக்கும் சிலரை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அவர்களின் புகார்களை காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை. முதல்வர் ஸ்டாலின் ஏன் இன்னும் அதிகமாக நலத்திட்டங்களை செய்யவில்லை என்று அவர்கள் கேள்வி கேட்பது காமெடியாக இருக்கிறது. தமிழில் இதற்கு பதில் இருக்கிறது. 5ம் வகுப்பு பெயில் ஆனவர்.. பிஎச்டி செய்தவரை பார்த்து ஏன் இரண்டாவது பிஎச்டி செய்யவில்லை என்று கேட்பது போல இருக்கிறது.

நலத்திட்டம்
எங்கள் அரசு ஏற்கனவே நலத்திட்டங்களை செய்துள்ளது. ஒன்றும் செய்யாத நீங்கள் இதை கேள்வி கேட்கலாமா? உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியுமா? நான் படித்த,சிந்தித்த நபர்.இவர்களை போன்றவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பிடிஆர் தனது பேட்டியில் கூறினார். இதை பகிர்ந்த சுமந்த் ராமன் என்பவர்.. பிடிஆர் பயன்படுத்திய riff raff என்ற சொல்லை விமர்சனம் செய்து இருந்தார். பிடிஆர் இது போன்ற பேட்டிகளை எல்லாம் கொடுக்க கூடாது என்று விமர்சனம் செய்தார். இந்த சுமந்த் தூர்தர்ஷனில் விளையாட்டு சார்ந்த வினாடி வினா நடத்தி அறியப்படுபவராகும். மருத்துவராகவும் உள்ளார்.

டிரெண்ட் வீடியோ
இந்த நிலையில் அந்த நபருக்கு பிடிஆர் பதில் அளித்ததோடு riff raff என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும் (விரும்பத்தகாத, கீழான என்று பொருள்) விளக்கி உள்ளார். பிடிஆர் கொடுத்த விளக்கத்தில்.. Vocabulary குறைபாடு உள்ளதா? அல்லது.. வெறுப்புகளை சுமந்து திரியும் மதவெறியர்கள், ரவுடிகள், குற்றவாளிகள், 360 டிகிரி ஆடு மூலம் திரட்டப்பட்ட கும்பல்களை கீழானவர்கள், விரும்பத்தகாதவர்கள் என்று விமர்சனம் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

எதிர்ப்பு
அதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? அவர்கள் மற்றவர்களை தேச துரோகிகள் என்று அழைக்கிறார்கள். அல்லது அதை விட மோசமாக அழைக்கிறார்கள். நாங்கள் அதை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? ஏன் நாங்கள் இரண்டாம் தர குடி மக்களா? சொல்லுங்கள்? என்று பிடிஆர் அந்த நபரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு riff raff என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும் பகிர்ந்து ஆங்கில கிளாஸ் எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications